அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் வலியுறுத்தல்; தர்ப்பூசணி விவசாயிகள் பாதித்ததால்
மதுரை : 'தர்பூசணியில் ஒரு சிலர் செய்த தவறுக்காக, கொள்முதல் செய்பவர்கள், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டதற்கு காரணமான அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.மதுரையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மண்டல ஆலோசனைக் கூட்டம் மாநில அமைப்பாளர் தங்கராஜ் தலைமையில் நடந்தது. மாவட்டத் துணைத் தலைவர் கரண்சிங் வரவேற்றார்.தீர்மானங்கள் குறித்து தலைவர் மைக்கேல்ராஜ் பேசியதாவது: தர்பூசணி விவகாரத்தில் விவசாயிகளை மறந்து, வாழ்வாதாரத்தை பாதிக்கும் விதமாக அதிகாரிகள் செயல்படுகின்றனர். ஒருசிலர் ரசாயனம் கலந்துள்ளனர். ஆனால் விவசாயிகளின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது.சிறு, குறு வியாபாரிகளிடம் எடுக்கும் நடவடிக்கையைபெரிய கார்பரேட் நிறுவனங்களிடம் எடுக்க மறுப்பது ஏன். இயற்கையான பழங்களில் ரசாயனம் கலப்பதாக குற்றம் சுமத்துபவர்கள், குளிர்பானங்களில் கலக்கப்படும் ரசாயனத்திற்கு நடவடிக்கை எடுத்ததுண்டா. இரு ஆண்டுகளாக ஆன்லைன் வணிகம் அதிகரித்ததால் வணிகர்கள் பெருமளவு பாதித்துள்ளனர். இதனால் பலர் தொழிலையே விட்டு விட்டனர்.எனவே ஆன்லைன் வியாபாரத்திற்கு வரிகள் விதித்து, கட்டுபாடுகளை அதிகரித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மே 5ல் மாநில மாநாடு திருவண்ணாமலையில் நடக்க உள்ளது என்றார். துணைத் தலைவர் கார்மேகம் நன்றி கூறினார்.மாநிலத் துணைத் தலைவர் சூசை அந்தோணி, செயலாளர் அந்தோணிராஜ், மதுரை செயலாளர்கள் ஜெயக்குமார், தேனப்பன், பொருளாளர் மரிய சுவிட்ராஜன், இளைஞரணித் தலைவர் சிவா, இளைஞரணி ஆதி பிரகாஷ், சுருளிராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.