உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சத்திய சோதனை: காந்தி மியூசியத்திற்குள் ஒண்டு குடித்தனத்தில் அரசு மியூசியம் : இடநெருக்கடியின்றி சிலைகள் இடம் மாறிச் செல்லும் விசித்திரம்

சத்திய சோதனை: காந்தி மியூசியத்திற்குள் ஒண்டு குடித்தனத்தில் அரசு மியூசியம் : இடநெருக்கடியின்றி சிலைகள் இடம் மாறிச் செல்லும் விசித்திரம்

தமுக்கம் மைதானம் அருகே பிரதான இடத்தில் 16 ஏக்கரில் ராணி மங்கம்மாளின் அரண்மனையாக இருந்த இடம் 1961ல் காந்தி மியூசியம் அமைக்க காந்தி ஸ்மாரக் நிதிக்கு தமிழக அரசு வழங்கியது. மதுரையில் 1981ல் உலகத்தமிழ்ச்சங்க மாநாடு நடந்த போது காந்தி மியூசிய வளாகத்திற்குள் சிறிய கட்டடத்தில் அரசு மியூசியம் அமைக்கப்பட்டது. அதற்காக மாதந்தோறும் வாடகையை தமிழக அரசு காந்தி மியூசியத்திற்கு செலுத்துகிறது. நடுவில் மியூசியமும் மீதி காலியிடங்களாகவும் ஆங்காங்கே சிறு குடில்களும் உள்ளன. குடில்கள், கடைகள், காலியிடத்தை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருமானம் காந்தி மியூசியத்திற்கு செல்கிறது. ஆனால் காந்தி மியூசியம்செயல்படுவதற்கான பராமரிப்பு செலவாக ஆண்டுதோறும் தமிழக அரசு ரூ.10 லட்சம் வரை வழங்குகிறது. மேலும் கடந்தாண்டு ரூ.12 கோடி செலவில் மியூசிய புனரமைப்பு பணிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.

ஒப்புக்கு அரசு மியூசியம்

பெயருக்கு சிறிய கட்டடத்தில் அரசு மியூசியம் இருப்பதை அரசே கண்டு கொள்ளவில்லை. மியூசியம் அமைக்கும் போது பொருட்கள்மீது கண்ணாடி அமைத்து வைக்கப்பட்ட மரச்சட்டங்கள் கரையான் அரிக்கப்பட்டு பரிதாபமாக காட்சியளிக்கிறது. இடவசதியின்றி சற்று தள்ளியுள்ள பத்துக்கு பத்தடி இடத்தில் அலுவலகம் மூச்சுதிணறலுடன் செயல்படுகிறது. பாண்டியர் காலத்தில் பயன்படுத்திய கருவிகள், பொருட்கள், கற்சிலைகள், உலோக சிலைகள், கல்வெட்டுகள், கிராமிய கலைகள், அரிய கலை பொக்கிஷங்கள் அனைத்தும் அரசு மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. பழங்கால கற்சிற்பங்கள்பராமரிப்பின்றி திறந்தவெளியில் கிடந்த நிலையில் சமீபத்தில் தான் சிறிய அறை கட்டப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது. அதை பார்வையாளர்களும் பார்க்க முடிவதில்லை.

இடத்தை மீட்க வேண்டும்

மதுரையில் பல்வேறு இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகளை பாதுகாக்க இடமின்றி புதுக்கோட்டை மியூசிய கோடவுனில் வைத்துள்ளனர். பல்வேறு இடங்களில் பயனற்று குவிக்கப்பட்டிருக்கும் அனைத்து கலைப்பொருட்களையும் ஒரே இடத்தில் வைத்து பார்வையாளர்களை கவரலாம். மேலும் மதுரையின் வரலாறு சொல்லும் வகையில் ஒலி ஒளி காட்சியும் அமைக்கலாம். காந்தி ஸ்மாரக் நிதியிடம் இருந்து குறைந்தது 5 ஏக்கர் இடத்தை பெற்று கீழடியில் உள்ளதைப் போன்று மதுரையில் பிரமாண்டமான மியூசியம் அமைக்கலாம். சென்னை அரசு மியூசியம் சார்பில் அரசுக்கும் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளதால் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி