லாரி - கார் மோதல் இருவர் பலி
மேலுார்: சிவகங்கை மாவட்டம், ஜெயங்கொண்டநிலை ஊரை சேர்ந்தவர் தனசேகரன், 61; உடல் நலக்குறைவால் இறந்தார். இவரது இறுதி சடங்கில் பங்கேற்க, மகன் அருண்ராஜ் துபாயிலிருந்து, மதுரைக்கு நேற்று காலை விமானத்தில் வந்தார். அவரை அழைத்து வருவதற்காக, காரில், உறவினர்களான ஆர்.பிரதீப், 29, டி.பிரதீப், 28, கரண், 25, ஆகியோர் சென்றனர். ஆர்.பிரதீப் காரை ஓட்டினார். மேலுார் தெற்குத்தெரு நான்கு வழிச்சாலையில், எவ்வித எச்சரிக்கையும் இல்லாமல், சாலையின் நடுப்பக்கத்தில், செடிகளுக்கு லாரி மூலம் ஊழியர்கள் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக, அந்த லாரியின் பின்பக்கம் கார் மோதியது. இதில், ஆர்.பிரதீப், டி.பிரதீப் உயிரிழந்தனர். கரண், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.