உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இயற்கை உரங்களை பயன்படுத்துங்க

இயற்கை உரங்களை பயன்படுத்துங்க

மதுரை : 'பயிர் சாகுபடி செலவைக் குறைக்க இயற்கை உரங்களைப் பயன்படுத்தலாம்' என மதுரை வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: பசுந்தாள் உரங்கள் (மடக்கி உழுதல்), பசுந்தழைகள், மட்கிய தொழுஉரம், மண்புழு உரம் ஆகியவை இயற்கை உரங்கள். இதில் பயிர்களுக்கு தேவையான எல்லா சத்துகளும் உள்ளது. தக்கைப்பூண்டு, கொழிஞ்சி, சணப்பு விதைகளை நிலத்தில் விதைத்து 40 - 50 நாட்களில் பூக்கும் பருவத்தில் மடக்கி உழ வேண்டும். கொழிஞ்சி, எருக்கு, ஆவாரம் தண்டுடன் வெட்டி எடுத்து நிலத்தில் இட்டு உழ வேண்டும்.இவை மட்கும் போது மண்ணில் வாழும் பலவகையான நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது. மண்ணின் இயற்பியல் மற்றும் வேதியியல் குணத்தை மேம்படுத்துகிறது. இதனால் பயிர்களுக்கு நல்ல காற்றோட்டமும், வடிகால் வசதியும் கிடைப்பதால் செழித்து வளரும். இயற்கை உரங்கள் நிலத்தில் போர்வையாக அமைந்து நீர் ஆவியாகி வீணாவதைத் தடுப்பதோடு மண் வெப்பநிலையை பாதுகாக்கிறது. மண் இறுக்கத்தை குறைத்து, நீர் ஊடுருவும் தன்மை, ஈரப்பிடிப்புத் தன்மையை அதிகரிக்கிறது. மண்ணில் ஏற்படும் திடீர் ரசாயன மாற்றங்களை சரிகட்டுவதோடு களர் உவர் நிலங்களை சீர்திருத்துகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி