கோயில் யானைகளுக்கு மீண்டும் புத்துணர்வு முகாம்; விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்
மதுரை : ''கோயில் யானைகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகாமல் இருக்க மீண்டும் புத்துணர்வு முகாம் நடத்த வேண்டும்'' என விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணைச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறினார்.மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஹிந்து விரோத ஆட்சி நடத்தி வரும் தி.மு.க., அரசால் கோயில்களில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன.கிராம கோயில்களில் தினசரி பூஜைகள் நடக்க முடியாத அளவு நிதிஒதுக்கீடு செய்ய தி.மு.க., அரசு மறுத்துவருகிறது.இதனால் தமிழகத்தில் கிராமங்களில் உள்ள முக்கிய சில கோயில்கள், பல சமுதாய குலதெய்வக் கோயில்கள் முறையான பூஜைகள் ஏதுமின்றி போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகின்றன.கோயில் திருவிழாக்களில் உலா வரும் யானைகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன. திருச்செந்துார் கோயில் யானை தெய்வானை பாகன் உட்பட இருவரை கொன்றதற்கு அது முறையாக பராமரிக்கப்படாததே காரணம் என கால்நடை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.யானைகள் நலன் கருதி முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் யானைகளுக்கு முதுமலை தெப்பக்காடு பகுதியில் புத்துணர்ச்சி முகாம் நடத்தப்பட்டது.அங்கு ஒரு மாதத்திற்கு மேலாக யானைகள் பராமரிக்கப்பட்டு இயற்கை சூழ்நிலையில் சரியான சரிவிகித சத்துணவு எடுத்து புத்துணர்வு பெற்று திரும்பின.ஆனால் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததிலிருந்து யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடப்பது கைவிடப்பட்டது. இதனால் கோயில் யானைகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றன. ஏற்கனவே திருப்பரங்குன்றம் கோயில் யானை பாகனை தாக்கியது.தமிழக அரசு பராமரிப்பில் இல்லாவிட்டாலும் கூட சிவகங்கை சமஸ்தானத்துக்குட்பட்ட குன்றக்குடி யானை மனிதத் தவறால் தீக்காயமுற்று இறந்தது. எனவே தமிழக அரசு கோயில் யானைகளை புத்துணவு முகாம்களுக்கு அனுப்பி முறையாக பராமரிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.