அகவிலைப்படி உயர்வு, நிலுவைத்தொகை தாமதமின்றி வழங்க வேண்டும் குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்
மதுரை:'தமிழக அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வு இம்முறையாவது அறிவித்த தேதியில் கிடைக்குமா. மூன்றாண்டு காலம் வழங்கப்படாத அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்கப்படுமா என தமிழக குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழக அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்வை 53 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக உயர்த்தி கடந்த ஜனவரி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.தமிழக குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்களும் அரசு அறிவித்த அகவிலைப்படி தங்களுக்கும் ஜனவரியில் இருந்து வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். கடந்த காலங்களில் குடிநீர் வாரிய ஓய்வூதியர்களுக்கு மட்டும் 2022 ஜனவரி முதல் 2024 ஜூலை வரை உயர்த்தி வழங்கப்பட்ட 7 அகவிலைப்படி உயர்வு, ஒவ்வொரு முறையும் குறைந்தது 6 மாதங்களுக்கு பின் காலம் தாழ்த்தியே வழங்கப்பட்டது. அதேநேரம் தாமதமான 6 மாத நிலுவைத்தொகையும் வழங்கப்படுவதில்லை.இதுகுறித்து ஓய்வூதியர்கள் பலமுறை அரசுக்கு மனுக்கள் அனுப்பியும் அதனை வழங்கவில்லை. இதனால் இந்த நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று எதிர்பார்த்து உள்ளனர். அத்துடன் இந்தாண்டு அறிவித்த 2 சதவீதம் அகவிலைப்படியை அறிவித்தது போல கடந்த ஜனவரியில் இருந்தே முன்தேதியிட்டு அரசு வழங்க வேண்டும் என 10 ஆயிரம் ஓய்வூதியர்கள் எதிர்பார்க்கின்றனர்.குடிநீர் வாரிய ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் நலச்சங்க மாநில துணைப்பொதுச் செயலாளர் பாண்டி கூறியதாவது: அரசு துறை ஊழியர்கள், ஓய்வூதியர்கள், பொதுத்துறையினர், பிறவாரியங்களில் பணியாற்றியோர் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதகால நிலுவைத் தொகையுடன் மே மாத ஓய்வூதியத்தில் அகவிலைப்படி உயர்வை பெற உள்ளனர்.கடந்த காலங்களில் குடிநீர் வாரியத்திற்கு மட்டும்காலம் தாழ்த்தியே வழங்கியது ஏனென்று தெரியவில்லை. அதிகாரிகள் அலட்சியப்படுத்தாமல் பாரபட்சமற்ற முறையில் வழங்க வேண்டும் என்றார்.