உடையும் குழாயால் வீணாகும் குடிநீர்
சோழவந்தான்: தேனுார் அருகே ரோட்டோரத்தில் பதித்துள்ள குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீணாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.சோழவந்தான், திருவேடகம் பகுதி வைகை ஆற்றில் உள்ள கிணறுகள், போர்களில் இருந்து திருப்பரங்குன்றம், அவனியாபுரம், விளாங்குடி என பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இக்குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் அப்பகுதி தோப்புகள், காடுகள், மீண்டும் ஆற்றில் கலப்பது என வீணாகிறது.இந்நிலையில் சில நாட்களாக மேலக்கால் தேனுார் ரோட்டில் தனியார் முதியோர் இல்லம் அருகே விளாங்குடிக்கு குடிநீர் செல்லும் குழாயில் சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. உடைந்த குழாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.