நாங்க ரெடி... நீங்க ரெடியா... : பருவமழையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடு: தயார் நிலையில் மணல் மூடைகள், மரம் வெட்டும் கருவிகள்
மதுரை: மதுரை மாவட்டத்தில் ஒன்றியங்களுக்கு சொந்தமான 951 கண்மாய்களில் 106 ல் 70 சதவீத தண்ணீர் உள்ளது. பருவமழை பாதிப்புகளை சமாளிக்க மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டுள்ளது. வடகிழக்கு பருவமழை நேற்று (அக்.16) துவங்கியது. தமிழகத்திற்கு அதிகளவில் மழை தரும் இப்பருவ காலத்தில் வெள்ள பாதிப்பு, தொற்று நோய் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு அதிகம். இதனால் கலெக்டர் பிரவீன்குமார் ஏற்பாட்டில் மாவட்ட அளவில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை பணியில் முடுக்கி விடப்பட்டுள்ளன. மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அரவிந்த், ஒன்றியங்கள் தோறும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை தெரிவித்து கண்காணித்து வருகிறார். மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களுக்கு சொந்தமாக 951 கண்மாய்கள் உள்ளன. ஒன்றுக்குப்பின் ஒன்றாக தொடர் தண்ணீர் வரத்துள்ள 'சிஸ்டம் டேங்க்ஸ்' எனப்படும் பெரும்பாலான கண்மாய்களில் ஏற்கனவே தண்ணீர் உள்ளது. இவ்வகையில் 106 கண்மாய்களில் 70 சதவீதத்திற்கும் மேலாக தண்ணீர் உள்ளது. மற்றவற்றில் பெரும்பாலானவை வறண்ட நிலையில் கிடக்கின்றன. இக்கண்மாய்களை உதவிப் பொறியாளர் நிலையில் உள்ள அதிகாரி மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளனர். அனைத்து ஒன்றியங்களிலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தயார் நிலையில் இருக்கும்படியும், வெள்ள பாதிப்பு வந்தால் மக்கள் தங்க நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிட்டுள்ளனர். இதற்காக வாடிப்பட்டி அருகே திருவாலவாய நல்லுார், கள்ளிக்குடி ஒன்றியத்தில் நெடுங்குளம் உட்பட 4 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் மரங்கள் சாய்ந்தால் அப்புறப்படுத்த வெட்டும் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள், ஒவ்வொரு ஒன்றியத்திலும் 600 மணல் மூடைகளை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளனர். தொற்று நோய் பரவாமலிருக்க குடிநீர் தொட்டிகளில் 15 நாட்களுக்கு ஒருமுறை 'குளோரினேட்' செய்யவும் ஏற்பாடு செய்துள்ளனர். மழை பாதிப்புகள் இருந்தால் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு '1077' என்ற டோல் பிரீ எண்ணில் தெரிவிக்கலாம் என பேரிடர் மேலாண்மை பிரிவு (பொறுப்பு) தாசில்தார் இளமுருகன் தெரிவித்தார்.
அணைகளில் நீர்மட்டம்
n பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.6 அடி. (மொத்த உயரம் 152). அணையில் 5071 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2375 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி வெளியேற்றப்படுகிறது. n வைகை அணையின் நீர்மட்டம் 62.01 அடி. (மொத்த உயரம் 71 அடி). அணையில் 3995 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 1307 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. வினாடிக்கு 1199 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. n சாத்தையாறு அணையின் நீர்மட்டம் 4.4 அடி. (மொத்த உயரம் 29 அடி). அணையின் நீர் இருப்பு 2.62 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்தும், வெளியேற்றமும் இல்லை.
நேற்று முன்தினம் மழையளவு
(மி.மீ.,)
மதுரை வடக்கு 0.4, விரகனுார் 1.4, சிட்டம்பட்டி 3.2, வாடிப்பட்டி 7, உசிலம்பட்டி 12, குப்பணம்பட்டி 5.6, பேரையூர் 10.6, எழுமலை 2.6.