குடிநீருடன் கழிவுநீரையும் குடிக்கிறோம் அகிம்சாபுரம் மக்களின் இம்சை
மதுரை, : மதுரை அகிம்சாபுரம் மேலத்தெரு பகுதியில் 2 மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.மதுரை மாநகராட்சி 27 வார்டில் செல்லுார் 60 அடி, 50 அடி ரோடுகள், போஸ் வீதி, ஜீவா ரோடு, சுயராஜ்யபுரம் மெயின் வீதிகள், அகிம்சாபுரம் பகுதிகள் உள்ளன.இங்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் சாக்கடை கால்வாய் சரியாக துார்வாரப்படாததால் மழைக்காலங்களில் அவை நிரம்பி வழிவதால் அல்லல்படுகின்றனர். தினமும் 2 முறை வரும் குப்பை வண்டிகள், ஒரு முறையே வருவதால், எங்கு நோக்கினும் குப்பை மலையை காணலாம்.அகிம்சாபுரம் சீதாலட்சுமி: மேலத்தெருவில் 200 குடும்பங்களுக்கு மேல் உள்ளன. இரு மாதங்களாக குடிநீர் கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் வருகிறது. எனவே மாற்று ஏற்பாடாக லாரி மூலம் தண்ணீர் வினியோகிக்கின்றனர். கழிவுநீர் கலந்த குடிநீர்
இருந்தாலும் மாடியில் வசிப்போர், ஆழ்துளை கிணறு இல்லாத குடும்பங்களின் நிலை கொடுமையாக உள்ளது. குடிநீருக்காகவே காத்திருக்க வேண்டியள்ளதால் அன்றாட வேலைகளை செய்ய முடிவதில்லை. அடுத்த தெருவிலும் இதே பிரச்னை இருந்தது. சமீபத்தில் அங்கு சரியாகிவிட்டது. ஆனால் எங்கள் தெருவுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. முக்கிய ரோடுகளில் தெருவிளக்கு இல்லாததால் இரவில் தனியே செல்லமுடியவில்லை. தெருநாய்கள் தொல்லைகள் அதிகமுள்ளது.போஸ் வீதி கமலா: எங்கள் தெருக்களில் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக ரோடுகளை தோண்டினர். ஆனால் பணிமுடிந்தபின் சரிசெய்யவில்லை. ஜல்லிக் கற்களை கொட்டி மூடியுள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். குப்பையை தினமும் அகற்றுவதில்லை. இதனால் வீட்டிலும், ரோட்டிலும், குப்பைத் தொட்டிகள் நிரம்பி, கொசுக்கள் அதிகரித்துள்ளன. மழைநீர் வடிகால் வாய்க்கால் செல்லுார் ரோடுகளிலும், அகிம்சாபுரத்திலும் முழுமையாக தோண்டவில்லை. மழைக்காலம் என்பதால் விரைந்து சரிசெய்ய வேண்டும்.கவுன்சிலர் மாயத்தேவன் (அ.தி.மு.க.,): குடிநீர் பிரச்னை தொடர்பாக மண்டலத் தலைவரிடம் கூறியுள்ளோம். சிவகாமிபுரம், முத்துராமலிங்கபுரம், வள்ளுவர் தெரு உள்பட பல பகுதிகளில் ரூ.ஒரு கோடி செலவில் 15 ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன.குப்பை அள்ளுவதில் பிரச்னை இருக்கிறது. தினமும் 2 முறை மாநகராட்சி ஆட்கள் வருவர். வெள்ளக்கல்லில் ரோடு சரியில்லாததால் சென்று திரும்புவதில் சிக்கல் இருப்பதாக கூறுகின்றனர். போஸ் வீதி, 60அடி ரோடு பகுதியில் மழைநீர் வாய்க்காலை ரூ.3 லட்சத்தில் துார்வாரியிருக்கிறோம். தாறுமாறான ரோடுகள் போதிய நிதி தருவதில்லை
தெருவில் 30 விளக்குகள் இல்லை. ஐம்பது அடி, 60அடி ரோடுகளில் 120 வாட்ஸ் விளக்குகள் பொருத்தினால் பயனுள்ளதாக இருக்கும். ரோடுகள் அமைக்க, தெரு விளக்குகள் அமைக்க ரூ.45லட்சம் தேவைப்படுகிறது. இதுகுறித்த விவரங்களை எம்.எல்.ஏ.,வுக்கு அனுப்பியுள்ளோம். நிதி கிடைத்தால் வேலையை துரிதமாக செயல்படுத்துவோம். நரிமேடு வழியே செல்லுார் பகுதிக்கு பஸ் இயக்கினால் இப்பகுதியினர் பயன்பெறுவர்.