கால்வாய் கரையில் சாலை வேண்டும்
வாடிப்பட்டி: நாகமலை புதுக்கோட்டை நிலையூர் கால்வாய்க் கரையில் சாலை வசதியின்றி கிராம மக்கள், விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இங்குள்ள நான்கு வழிச்சாலை பிரிவில் இருந்து கால்வாய்க் கரை ரோடு 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்த சாலை சேதமடைந்து பல ஆண்டு களாக ஜல்லிக் கற்களாக காட்சியளிக்கிறது. மழை நேரம் ஆங்காங்கே சேறும், சகதியுமாக மாறுகிறது என அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர். ம.தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் அறிவழகன்: நாகமலை ஆனந்த் ஐயப்பன் கோயில், புல்லுாத்து வரையான 3 கி.மீ., சாலை மிக மோசமாக உள்ளது. விவசாய இடு பொருட்களை வயலுக்கு கொண்டு செல்ல முடிய வில்லை. குடியிருப்பு வாசிகளும் அதிகம் சிரமப்படுகின்றனர். இந்தச் சாலை திருப்பரங்குன்றம், மதுரை மேற்கு தொகுதியின் கீழ் வருகிறது. தொகுதி மேம்பாட்டு நிதி அல்லது நீர்வளத்துறை மூலம் சாலை, கால்வாய் ஓர தடுப்பு, மின் விளக்குகளை அமைத்து தர வேண்டும் என்றார்.