ஒருபுறம் வரவேற்பு; மறுபுறம் எதிர்ப்பு மேலுார் சிப்காட்டிற்கு தொடரும் சிக்கல்
மேலுார்: மேலுார் தாலுகாவிற்கு உட்பட்ட வஞ்சிநகரம், கொடுக்கம்பட்டி, பூதமங்கலத்தில் 278 ஏக்கரில் சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று சிப்காட் தொழிற்சாலை அமைக்க அளவீடு செய்யவந்தவருவாய்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து ஆர்.ஐ., இக்பால் தலைமையில்அளவீடு செய்யும் பணிநடந்தது. இதற்கிடையே கைதானவர்கள் பஸ் மறியலில் ஈடுபட மதுரை - மேலுார் மாநில நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது. சிப்காட்டை விரைந்து செயல்படுத்த மனு மேலுார் வஞ்சிநகரம் பகுதியில் அமைய உள்ள சிப்காட் நிறுவனத்திற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரைந்து செய்யக் கோரி அப்பகுதி மக்கள் கலெக்டர் பிரவீன் குமாரிடம் மனு அளித்தனர். வழக்கறிஞர்கள் பாண்டியராஜன், சசிகுமார், பார்த்திபன் கூறியதாவது: மேலுார் வஞ்சிநகரம், கொடுக்கம்பட்டி, பூதமங்கலம் ஊராட்சி பகுதிகளில் சிப்காட் அமைக்க இடம் உள்ளது. எங்கள் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இங்கு ஆக்கிரமிப்பில் உள்ள 10 குடும்பத்தினர், தங்களது ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றி விடும் என்ற பயத்தில் சிப்காட் வரவிடாமல் தடுக்கின்றனர். மேலுாரில் ஒருபோக பாசன தண்ணீர் கூட இங்கு வராது. வானம் பார்த்த பூமி தான். இங்குள்ளோர் வெளிநாட்டிற்கும் வெளிமாவட்டங்களுக்கும் பிழைப்பு தேடி செல்கின்றனர். சிப்காட் வந்தால் மேலுார் தொகுதி முழுக்க பயன்பெறுவர். சிவல்பட்டியில் ஆதரவு தெரிவிக்கும் 90 சதவீதம் பேரை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. எதிர்ப்பைதான் பிரதானமாக பார்க்கிறார்கள். நெல்லுகுண்டுபட்டி, சாவரபட்டி, காரைக்குடிபட்டி, வஞ்சிநகரம், நாட்டார் மங்கலம் மக்கள் சிப்காட் வேண்டும் என்கிறோம். அதன் சிறப்புகளை மக்களிடம் சொல்வதற்கு அதிகாரிகள் வரவில்லை. 3 மாதத்திற்கு முன்பு கலெக்டரிடம் மனு கொடுத்தோம். பயன் இல்லை என்பதால் மீண்டும் கொடுத்தோம் என்றனர்.