உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகளை ஏமாற்றும் தமிழக அரசு நெல்லுக்கு சொன்ன சொல் என்னாச்சு?

விவசாயிகளை ஏமாற்றும் தமிழக அரசு நெல்லுக்கு சொன்ன சொல் என்னாச்சு?

மதுரை: 'ஆட்சியை பிடிப்பதற்காக வாக்குறுதி வழங்கிய தி.மு.க., அரசு, நான்காண்டுகளை கடந்த நிலையிலும், நெல்லுக்குரிய விலை வழங்கப்படும் என்று சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை. திராவிட மாடல் பெருமை பேசும் முதல்வர் ஸ்டாலின், இந்த விஷயத்தில் வடமாநிலங்களை பார்த்து பாடம் படிக்க வேண்டும்' என்கின்றனர் விவசாயிகள்.மத்திய அரசின் புள்ளி விபரப்படி, 2001க்கு பிறகு தமிழகத்தில் நெற்பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மூன்றாண்டுகள் மட்டுமே லாபமும், மற்ற ஆண்டுகளில் தொடர்ச்சியாக நஷ்டமும் அடைந்துள்ளனர். குவின்டால் நெல்லுக்கு, 2,320 ரூபாய் என மத்திய அரசு கொடுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, இந்தியா முழுவதற்கும் பொதுவானது.மாநிலங்களை பொறுத்தவரை உற்பத்தி செலவில் நிறைய மாறுபாடுகள் உள்ளன. தொழிலாளர்கள் கிடைக்கக்கூடிய இடங்களில் குறைந்தபட்ச கூலி சாத்தியமாகிறது. தமிழகத்தில் கூலி இருமடங்காக அதிகரித்து விட்டது. இந்திய அளவில் ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில், 8.62 சதவீதமாக இருந்த தமிழகத்தின் பங்களிப்பு, 5.64 சதவீதமாக குறைந்துள்ளது. விவசாயிகள் கூறியதாவது:இந்திய பொருளாதாரத்தில் முதலிடம் வகிக்கும் தமிழகத்தில், விவசாயிகள் வருமானத்தில், 22வது இடத்தில் உள்ளது. அரசு விவசாயத்தை புறக்கணிப்பதையே இக்குறியீடு உணர்த்துகிறது. நெல்லுக்கு குவின்டாலுக்கு, 3,500 ரூபாய் இல்லாமல் தமிழகத்தில் நெல் சாகுபடி செய்ய முடியாத சூழல் உள்ளது. 2021 சட்டசபை தேர்தல் அறிக்கையில், நெல் குவின்டாலுக்கு, 2,500 ரூபாய் வழங்கப்படும் என, தி.மு.க., தெரிவித்தது. அதே, 2021ல் மத்திய அரசு வழங்கி வந்த குறைந்தபட்ச ஆதார விலை குவின்டாலுக்கு, 1,888 ரூபாய் தான். ஆண்டுதோறும் உயர்த்தி தற்போது, 2,320 ரூபாயாக அதிகரித்துள்ளது. அடுத்தாண்டு 2,500 ரூபாயை எட்டி விடும். முதல்வர் ஸ்டாலின் அறிவித்த, 2,500 ரூபாய் அறிவிப்பு இதுவரை சாத்தியமாகவில்லை.ஒடிஷாவில் நெல் உற்பத்திச்செலவு ஏக்கருக்கு, 17,000; சத்தீஸ்கரில், 24,000 ரூபாய் ஆகிறது. அம்மாநில அரசுகள் குவின்டாலுக்கு, 780 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதால், அங்குள்ள விவசாயிகளுக்கு குவின்டாலுக்கு, 3,100 ரூபாய் விலை கிடைக்கிறது.தமிழகத்தில் விவசாயக்கூலி உயர்வு காரணமாக உற்பத்தி செலவு, 36,000 ரூபாயாக உள்ளது. தமிழக அரசு தன் பங்காக, 105 ரூபாய் மட்டுமே ஊக்கத்தொகை தருகிறது. ஊக்கத்தொகையாக, 1,180 ரூபாய் சேர்த்து குவின்டால் நெல்லுக்கு, 3,500 ரூபாய் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், ஒட்டுமொத்த விவசாயிகளும் வரும் சட்டசபை தேர்தலில் பாடம் புகட்டுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை