மதுரை - பெங்களூரு வந்தே பாரத் வரவேற்பு இல்லாதது ஏன்
மதுரை: பயணிகளின் வரவேற்பு காரணமாக, 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வரும் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ள நிலையில் மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகளின்வரவேற்பு குறைந்து வருகிறது.தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக மூன்று வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருநெல்வேலி - சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் (20665/20666) 2023 செப். 24லும், நாகர்கோவில் - சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தேபாரத் (20627/20628), மதுரை - பெங்களூரு கன்டோன்மென்ட் - மதுரை வந்தே பாரத் (20671/20672) ஆகிய ரயில்கள் இந்தாண்டு ஆக. 31லும் துவங்கப்பட்டன.இதில் திருநெல்வேலி - எழும்பூர் இடையே இயங்கி வரும் வந்தே பாரத் ரயில்களில் அக்டோபரில் 122.72 சதவீதமும் நவம்பரில் 119.55 சதவீமும், நாகர்கோவில் - எழும்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் அக்டோபரில் 106.30 சதவீதமும் நவம்பரில் 109.5 சதவீமும் பயணிகளின்வரவேற்பு உள்ளது.இந்த ரயில்களில் இருக்கைகள் எண்ணிக்கையை தாண்டி முன்பதிவு செய்து ஏராளமானோர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பது வழக்கம்.மதுரை - பெங்களூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் அக்டோபரில் 77.51 சதவீதம் நவம்பரில் 88.08 சதவீதம் மட்டுமே பயணிகளின்வரவேற்பு உள்ளது. சில நேரங்களில் 20 சதவீதம் இருக்கைகள் காலியாக செல்கிறது. இதற்குமதுரையில் இருந்து புறப்படும் நேரம், திருச்சி சுற்றிச் செல்வது, ஓசூர் செல்லாதது, திருச்சி வழி செல்வதால் அதிக கட்டணம் வசூலிப்பது போன்றவையே காரணம் என பயணிகள் கூறுகின்றனர்.மதுரையில் இருந்து அதிகாலை 5:15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக மதியம் 1:00 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் செல்கிறது. மறுமார்க்கத்தில் மதியம் 1:30 மணிக்கு புறப்பட்டு இரவு 9:45 மணிக்கு மதுரை வருகிறது.திண்டுக்கல் - கரூர் இடையே உள்ள 74 கி.மீ., துாரத்தை ஒன்றரை மணி நேத்தில் கடந்து விடலாம். ஆனால் வந்தே பாரத் திருச்சி வழியாக 171 கி.மீ., சுற்றி கரூர் செல்வதால் மூன்று மணி நேரம் ஆகிறது. பயண நேரம் கூடுவதுடன் டிக்கெட் கட்டணமும் அதிகமாக உள்ளது. ஓசூர் செல்லாத காரணத்தால் மதுரை, திண்டுக்கல்லை சேர்ந்த ஐ.டி., ஊழியர்களுக்கு இந்த ரயில் பயனற்றுப் போகிறது.எனவே மதுரையில் இருந்து காலை 6:00 மணிக்கு மேல் புறப்பட்டு திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஓசூர் வழியாக பெங்களூரு கன்டோன்மென்டிற்கு வந்தே பாரத் ரயிலை இயக்கினால் மட்டுமே பயணிகளின் வரவேற்பை பெற முடியும்.