உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை கூடல் நகரில் சரக்கு முனையம் கஸ்டம்ஸ் அலுவலகம் அமையுமா ஏற்றுமதியை அதிகப்படுத்த தொழில் நிறுவனங்கள் ஆலோசனை

மதுரை கூடல் நகரில் சரக்கு முனையம் கஸ்டம்ஸ் அலுவலகம் அமையுமா ஏற்றுமதியை அதிகப்படுத்த தொழில் நிறுவனங்கள் ஆலோசனை

மதுரை: மதுரை கூடல்நகரில் சரக்கு முனையம் (கண்டெய்னர் யார்டு), கஸ்டம்ஸ் அலுவலகம் அமைத்து, மதுரை- துாத்துக்குடி இருவழி சரக்கு ரயில் பாதை திட்டம் அமைத்தால் மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து ஏற்றுமதிக்கான பொருட்களை துாத்துக்குடி துறைமுகம் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என மதுரையைச் சேர்ந்த தொழில்நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்தனர். துாத்துக்குடி துறைமுகம் பன்னாட்டு வணிகத்திற்கான நுழைவாயிலாக இருந்தாலும் மதுரை, அதைச் சுற்றியுள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் (எம்.எஸ்.எம்.இ.,) நிறுவனங்களின் பொருட்களை லாரிகள் மூலம் கொண்டு செல்வதற்கு 6 முதல் 7 மணி நேரமும், சரக்கு ரயில்களில் 5 மணி நேரத்திற்கும் மேலாகிறது. அதிலிருந்து சரக்குகளை இறக்கி துறைமுகத்தில் 'கிளியரன்ஸ்' பெறுவதற்கு ஒன்று முதல் இரண்டு நாட்கள் தாமதம் ஏற்படுகிறது. 'இதன் மூலம் பொருட்களுக்கான மொத்த உற்பத்தி செலவில் 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கிறது' என்கிறார் மதுரை மடீட்சியா முன்னாள் தலைவர் லட்சுமிநாராயணன். அவர் கூறியதாவது: மதுரையில் இருந்து டெக்ஸ்டைல், இன்ஜினியரிங், பூக்கள் உட்பட பல்வேறு பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. தென்மாவட்டங்கள் மட்டுமின்றி கரூர், புதுக்கோட்டை, திருச்சி பகுதி நிறுவனங்களின் சரக்குகள் சென்னை துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கு தற்போது காலவிரயம், கூடுதல் போக்குவரத்து செலவு ஏற்படுகிறது. தற்போது மதுரை - துாத்துக்குடி வரையான ரயில் பாதையில் பயணிகள் ரயில், சரக்கு ரயில்கள் செல்கின்றன. சரக்குகளை கையாள துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மீளவிட்டான் வரையான 30 கி.மீ., துாரத்திற்கு சரக்கு ரயில் பாதை திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. அங்கிருந்து மதுரை கூடல்நகர் வரை சரக்கு ரயில் சேவைக்கான தனி இருவழி ரயில் பாதை அமைத்தால் கொண்டு செல்லும் நேரம் பாதியாக குறையும். அதற்காக கூடல்நகரில் சரக்கு முனையம் (கண்டெய்னர் யார்டு) மற்றும் கஸ்டம்ஸ் அலுவலகம் (ஹப்) அமைக்க வேண்டும். இதன் மூலம் சரக்கு போக்குவரத்திற்கான அனுமதி (கிளியரன்ஸ்) மதுரையிலேயே முடிந்து நேரடியாக துாத்துக்குடி துறைமுகத்திற்கு கண்டெய்னர்களில் சரக்குகள் விரைவாக செல்ல முடியும். மேலும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நேரடியாக மதுரையிலிருந்து பன்னாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். போக்குவரத்து (லாஜிஸ்டிக்ஸ்) மையங்கள், கிட்டங்கிகள், குளிர்பதன கிடங்குகள், பேக்கிங், தரக்கட்டுப்பாட்டு போன்ற துறைகளும் மதுரை, விருதுநகர், துாத்துக்குடி தொழில் வழித்தடத்தில் உருவாகும் போது ஜி.எஸ்.டி., வரி வருவாயும் துறைமுகத்தின் மூலம் வருவாயும் அரசுக்கு அதிகரிக்கும். எனவே மாநில அரசு மூலம் நிலத்தை கையகப்படுத்தி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து மதுரையை 'லாஜிஸ்டிக்ஸ் ஹப்'ஆக அறிவிக்கவேண்டும். மேலும் 'கண்டெய்னர் யார்டு', கஸ்டம்ஸ் அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் பெரு நிறுவனங்களும் தென்மாவட்டங்களை தேர்ந்தெடுத்து தொழில் முதலீடு செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !