UPDATED : ஏப் 17, 2025 06:46 AM | ADDED : ஏப் 17, 2025 06:23 AM
மதுரை: மதுரை அருகே கீழடியை சுற்றுலாத்தலமாக மாற்றியது போல், நாகமலை புதுக்கோட்டை கீழக்குயில்குடி சமணர் படுகைக்கு செல்வதற்கான அடிப்படை வசதிகளை செய்தால் சுற்றுலா பயணிகளின் விருப்பமான இடமாக மாறும்.கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, அழகர்மலை, மேட்டுப்பட்டியில் உள்ள சமணர் படுகைகள் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் கீழக்குயில்குடியில் அய்யனார் கோயில், கோயிலை ஒட்டி மலையேறுவதற்கான படிக்கட்டுகள் உள்ளன. பாறையை செதுக்கி வடிக்கப்பட்ட படிக்கட்டுகளில் கம்பியை பிடித்தபடி மலையேறுவது இளையோருக்கு சாகச பயணமாக இருக்கும். கோயிலின் பின்புற ரோட்டில் படிக்கட்டுகளுடன் கூடிய சமணர் படுகை உள்ளது. பெரியவர்களும் எளிதாக ஏறும் வகையில் அகலமான 30 படிக்கட்டுகளைத் தாண்டினால் பாறையை குடைந்து நீண்ட சமவெளி படுகை காணப்படும்.இதில் ஒரே நேரத்தில் 50 பேர் வரை உட்காரலாம். பாறையின் மேற்புற சுவரில் பாறை ஓவியங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மழை நேரத்தில் படுகையில் அமர்ந்தபடி பாறை கூட்டங்களை ரசிக்கலாம். அந்தரத்தில் நிற்கும் பக்கவாட்டு பாறையில் தீர்த்தங்கரர் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் பாறைகளும் ஆலமரங்களுமாக குளுகுளுவென காணப்படும் இந்த இடத்திற்கு உள்ளூர் மக்கள் விரும்பி வருகின்றனர். மதுரையில் வேறெங்கும் இல்லாத வகையில் இங்கு மட்டுமே நுாறாண்டுகளை கடந்த ஆலமர கூட்டங்களை பார்க்க முடியும்.வடிவேல் கரை ஊராட்சி சார்பில் இந்த பகுதி முழுவதும் தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து சமணர் படுகை செல்லும் 300 மீட்டர் நீளத்திற்கு மட்டும் பள்ளம் மேடாக உள்ளது. கழிப்பறை, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதியில்லை. அடிப்படை வசதிகள் மட்டும் செய்யப்பட்டால் 'வீக் எண்ட்' திருவிழாவாக இந்த இடம் களைகட்டும்.