உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அம்மா சிமென்ட் மீண்டும் கிடைக்குமா

அம்மா சிமென்ட் மீண்டும் கிடைக்குமா

மதுரை: ‘‘நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அம்மா சிமென்ட் வினியோகத்தை மீண்டும் துவக்க வேண்டும்’’ என ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் வலியுறுத்துகின்றனர். தமிழக அரசு மானிய விலையில் அம்மா சிமென்ட் வினியோகத்தை 2015 முதல் செயல்படுத்தி வந்தது. கடந்த ஜனவரி முதல் சப்ளை முழுமையாக நிறுத்தப்பட்டது. சிமென்ட் கேட்டு யாரும் பணம் செலுத்த வேண்டாம் என வாய்மொழி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இத்திட்டத்தில் எளியமக்களுக்கு சராசரியாக 110 மூடைகள் வழங்கப்பட்டன. வெளிமார்க்கெட் ஒரு மூடை விலை ரூ.350 முதல் ரூ.400க்கும் மேலாக உள்ள நிலையில், இத்திட்டத்தில் மூடை ஒன்று ரூ.216 என்ற மானிய விலையில் கிடைத்தது. மதுரையில் மட்டும் பத்தாண்டுகளில் 19.20 லட்சம் மூடைகள் விற்கப்பட்டன. எனவே இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த த.வெ.க., அரசு முன்வரவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர் சங்க மாநில தலைவர் சார்லஸ் கூறியதாவது: பத்தாண்டுகளுக்கும் மேலாக அம்மா சிமென்ட் பலருக்கும் பயன்தந்துள்ளது. கிராமத்தில் 90 சதவீதம் வீடுகளுக்கு இதனை பயன்படுத்தி இருப்பர். இத்திட்டத்தில் ஒரு பயனாளி ஒருமுறை மட்டுமே சிமென்ட் பெற இயலும். மறுமுறை வாங்க இயலாது. இதனை தளர்வு செய்யும் பட்சத்தில் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ளபடி ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் வெற்றி வீடுகட்டும் திட்டத்தில் பயன்பெற முடியும். இதேபோல் பிரதமர் வீடுகட்டும் திட்டத்திற்கும் சிமென்ட் பெற முடியும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ