உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டுகளாக மாறுமா ஓட்டுப்பெட்டி அதிர்ச்சியை சொல்லும் காங்., எம்.பி.,

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டுகளாக மாறுமா ஓட்டுப்பெட்டி அதிர்ச்சியை சொல்லும் காங்., எம்.பி.,

அவனியாபுரம்: 'விஜய்க்கு கூடும் கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறாது. எங்களுக்காக நடிகர் கார்த்திக் பிரசாரம் செய்தபோது கூட்டம் கூடியது. ஆனால் ஓட்டுப்பெட்டியை திறந்தபோது அதிர்ச்சிதான் காத்திருந்தது' என விருதுநகர் காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது: முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் குறித்து கோரிக்கை வைத்தோம். கடந்த முறை மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அப்போதைய கலெக்டர் சங்கீதா, குண்டாறு திட்டத்தின்கீழ் நீர் போக்குவரத்துக்காக ரூ. 66 கோடி திட்டம் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார். முதல்வரிடம் அதுகுறித்து வலியுறுத்தினேன். உடனடியாக நடவடிக்கை எடுக்க நிதித்துறை செயலர் உதயசந்திரனுக்கு முதல்வர் உத்தரவிட்டார். மதுரையை தூய்மையாக வைத்துக் கொள்ள இரவு பகல் பாராமல் உழைக்கின்ற துாய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு நாங்கள் துணை நிற்போம். த.வெ.க., தலைவர் விஜய் பரப்புரையில் அதிகளவில் கூட்டம் கூடுவதாக கூறுகின்றனர். கூட்டம் கூடுவதற்கும் வாக்கு வருவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. 2014ல் நடிகர் கார்த்திக் எங்களுக்காக சிவகாசியில் பிரசாரம் செய்தார். அப்போது கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. ஓட்டுப் பெட்டியை திறந்தபோதுதான் எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கூட்டம் என்பது வேறு ஓட்டு என்பது வேறு. பழனிசாமி தவறுகள்தான் த.வெ.க.,விற்கு ஓட்டுகளாக மாறப்போகிறது. விஜயை வைத்து எதிர்க்கட்சி இடத்தை நிரப்ப போகிறார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை