உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தெற்குவாசல் - வில்லாபுரம் இடையே ஆக்கிரமிப்புக்கு விடியல் கிடைக்குமா; பல்லாங்குழி ரோடுகளால் பதறும் வாகன ஓட்டிகள்

தெற்குவாசல் - வில்லாபுரம் இடையே ஆக்கிரமிப்புக்கு விடியல் கிடைக்குமா; பல்லாங்குழி ரோடுகளால் பதறும் வாகன ஓட்டிகள்

மதுரை: மதுரை தெற்கு வாசல் -- பெருங்குடி இடையே அவனியாபுரம் வரை ஆக்கிரமிப்புகளால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரோடு விரிவாக்கப் பணிகளை தாமதப்படுத்தி வாகன ஓட்டிகளை நெடுஞ்சாலைத் துறையினர் மனஉளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.மதுரை நகரின் எல்லா ரோடுகளும் வாகன ஓட்டிகளை மட்டுமல்ல, பாதசாரிகளையும் பதைபதைக்க வைக்கிறது. பிரதான ரோடுகள் பள்ளங்களால் பல்லைக்காட்டுகிறதென்றால், அனைத்து வார்டுகளுக்குள்ளும் குடிநீர், பாதாள சாக்கடை என ஏதாவது ஒரு காரணத்திற்காக பத்தடிக்கு குறுக்கு கோடுகளாக ரோட்டை தோண்டி மக்களை பாடாய்படுத்துகின்றனர்.

ஆக்கிரமிப்போ ஆக்கிரமிப்பு

'பீக் ஹவர்'களில் தெற்கு வாசல் முதல் மண்டேலா நகர் வரையான ரோட்டில் செல்வதென்றால் போதும் போதுமென்றாகி விடுகிறது. தெற்குவாசல் பாலம் மிகவும் பழுதடைந்துள்ளது. குறுகலாக உள்ளதால் நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. ரோட்டை 21 மீட்டர் அகலத்தில் நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தும் வகையில் மண்டேலா நகர் முதல் பெருங்குடியை தாண்டி வெள்ளக்கல் வரை 3.5 கி.மீ., வரையே விரிவாக்கம் செய்துள்ளனர்.அதன்பின் மீதியுள்ள 5.1 கி.மீ.,க்கு ஓராண்டுக்கும் மேலாக பணிகளை கிடப்பில் போட்டுள்ளனர். விமான நிலையம் செல்லும் பிரதான ரோடு என்பதால் தெற்கு வாசல் முதல் வெள்ளக்கல் வரையான பகுதியை விரிவாக்கம் செய்வது அவசியமான ஒன்று. இதற்காக வில்லாபுரம் பகுதியில் சில ஆக்கிரமிப்புகளை அகற்றியதோடு சரி. அதன்பின் எந்தப் பணியும் நடக்கவில்லை. இதனால் வில்லாபுரம், அவனியாபுரம் பைபாஸ் ரோடு பகுதிகள் ஆக்கிரமிப்பால் திணறுகிறது. எம்.எம்.சி., காலனி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆனால் அதற்கான முயற்சிகள் எதுவும் இல்லை.

மனஉளைச்சலா இருக்கு

பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்த ரோட்டை விரிவுபடுத்தும் திட்டம் உள்ளதே தவிர பணிகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் இந்த ரோட்டில் செல்லும் பயணிகளுக்கு மனஉளைச்சலாக உள்ளது. ரோடு விரிவாக்கம் குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சார்லஸிடம் கேட்டபோது, ''இந்த ரோட்டில் தெற்குவாசல் மேம்பாலம் அருகே கூடுதலாக ஒரு பாலம் அமைய உள்ளது. அப்பாலம் உட்பட விரிவாக்க பகுதிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாராகி வருகிறது. அதனை சமர்ப்பித்தபின் அனுமதி கிடைத்ததும் பணிகள் துவங்கும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Suresh Kannam
ஜன 26, 2025 18:40

திருச்சி, கோவை, சென்னை போன்ற மாவட்டங்களுக்கு வேலை நிமித்தமாக செல்லும்போது உண்மையில் மனது வலிக்கிறது. நம்ம மதுரை என்னடா பாவம் பண்ணுச்சு.. எந்த ஆட்சியிலும் ரோடோ அடிப்படை கட்டமைப்போ ஏதும் சரியா அமையருது இல்ல. எப்போ தான் ஒரு விடிவுக்காலம் போறக்குமோ.


sankaranarayanan
ஜன 22, 2025 21:03

திராவிட மாடல் அரசின்போது தமிழகம் முழுவதும் பல்லாங்குழி விளையாட தகுந்தாற்போல சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன ஆதலால் இனி பல்லாங்குழி விளையாடல் திராவிட அரசின் விளாயாட்டாக அறிவிப்பார்கள் அதற்கு ஏற்றாற்போல சாலைகள் அமைய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கல் ஆணையம்.


T.S.SUDARSAN
ஜன 22, 2025 11:26

நெடுஞ்சாலை துறை தூங்கி வழிகிறது. இதற்கு இரண்டு IAS &மினிஸ்டர் தேவையில்லை. கோவ்ட் வேலைகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. மதுரை ஒரு ஒடுக்கப்பட்ட மா நகராட்சி .


புதிய வீடியோ