மதுரை - தஞ்சை இடையே நேரடி ரயில் பாதை அமையுமா
மதுரை : மதுரையில் இருந்து தஞ்சைக்கு புதுக்கோட்டை வழியாக நேரடி ரயில் பாதை அமைக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.மதுரையில் இருந்து திண்டுக்கல், திருச்சி வழியாக தஞ்சைக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் துாரம் 206 கி.மீ.,. திருச்செந்துார் - சென்னை எழும்பூர் விரைவு ரயில், செங்கோட்டை - மயிலாடுதுறை பாசஞ்சர், நாகர்கோவில் - தாம்பரம் 'அந்த்யோதயா' ஆகிய ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறை பாசஞ்சர் காலையில் இயக்கப்படுகிறது.திருச்சி - தஞ்சை வழி 'மெயின் லைன்' என்பதால் நெரிசல் காரணமாக கூடுதல் ரயில்கள் இயக்குவதில் சிக்கல் உள்ளது. மதுரையில் இருந்து புதுக்கோட்டை வழியாக தஞ்சைக்கு ரயில் பாதை அமைத்தால் அதிக ரயில்களை இயக்க முடியும். மதுரையில் இருந்து மேலுார், திருப்பத்துார், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை வழியாக 179 கி.மீ.,க்கு ரயில் பாதை அமைக்கலாம். அல்லது மேலுார், திருப்பத்துார், பிள்ளையார்பட்டி, காரைக்குடி, திருமயம், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை வழியாக 200 கி.மீ., க்கு ரயில் பாதை அமைக்கலாம். இதில் காரைக்குடி - புதுக்கோட்டை இடையே 36 கி.மீ.,க்கு ஏற்கனவே ரயில் பாதை உள்ளது.எனவே 164 கி.மீ.,க்கு புதிய ரயில் பாதை அமைத்தால் போதும். துாரம் குறைவதுடன் அதற்கான நிதி தேவையும் குறைவதால் அரசின் ஒப்புதல் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. மேற்கண்ட வழிகளில் திருவாதவூர், நரசிங்கம்பட்டி, மேலுார், கீழவளவு, எஸ்.எஸ்.கோட்டை, திருப்பத்துார், பிள்ளையார்பட்டி, புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, வல்லம் ஆகிய ஊர்களில் ஸ்டேஷன்கள் அமைக்கலாம். ஏன் தேவை
இந்த நேரடி ரயில் போக்குவரத்தின் மூலம் வர்த்தகர்கள் பயனடைவர். காரைக்குடி, புதுக்கோட்டை மக்கள் மதுரைக்கும், தஞ்சைக்கும் எளிதாக செல்ல முடியும். காரைக்குடியில் அழகப்பா பல்கலை, மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற கல்வி நிறுவனங்கள் உள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இவ்வழித்தடம் பயனளிக்கும்.மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இவ்வழித்தடம் அமைவதன் மூலம் தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட மக்கள் மருத்துவ சேவைக்காக மதுரைக்கு எளிதில் வர முடியும்.இதுகுறித்து ம.தி.மு.க., முதன்மை செயலாளர் துரை எம்.பி., கூறியதாவது: தேர்தல் பிரசாரத்தின் போது புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டையை சேர்ந்த மக்கள், மதுரை - தஞ்சாவூர் இடையே நேரடி ரயில் பாதை அமைக்க கோரிக்கை விடுத்தனர். 2018ல் இப்புதிய வழித்தடத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டும் போதிய நிதி ஒதுக்கப்படாமல் பணிகள் துவங்கவில்லை. கடந்த லோக்சபா கூட்டத் தொடரில் இதுகுறித்து வலியுறுத்தினேன். தஞ்சை, புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை பகுதிகளில் 1000 ஆண்டு பழமையான கோவில்கள் உள்ளன. இப்புதிய வழித்தடம் அமைவதன் மூலம் ஆன்மிக சுற்றுலா மேம்படும் என்றார்.