உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் போலீஸ் விசாரணையில் தப்பி ஓடிய இளைஞர் பலி

மதுரையில் போலீஸ் விசாரணையில் தப்பி ஓடிய இளைஞர் பலி

மதுரை: மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூவரை போலீசார் பிடித்து விசாரித்த நிலையில் அதில் ஒருவர் தப்பி ஓட முயன்ற போது கழிவுநீர் கால்வாயில் விழுந்து மூழ்கி இறந்தார். மதுரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டுகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தேகத்திற்குரிய நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வண்டியூர் கல்மேடு பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் 30, அஜித்குமார் 30, பிரகாஷ் 29, ஆகியோரை அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் பிளவர்ஷீலா தலைமையிலான போலீசார் வண்டியூர் டோல்கேட் அருகேயுள்ள போலீஸ் அவுட்போஸ்ட்டிற்கு அழைத்து வந்து விசாரித்தனர். பின் அவர்களை 'ரிமாண்ட்' செய்ய முடிவு செய்து நேற்று காலை 10:30 மணியளவில் ஸ்டேஷனிற்கு அழைத்துச்செல்ல வேனில் ஏற்றினர். அப்போது தினேஷ்குமார் மட்டும் ஏறுவது போல் போக்கு காட்டி தப்பி ஓடினார். அவரை போலீசார் துரத்தினர். ஓடும் வழியில் வண்டியூர் கழிவுநீர் கால்வாயை தினேஷ்குமார் தாண்ட முயன்றபோது தவறி விழுந்து மூழ்கினார். கால்வாயை தாண்டி சென்றிருக்க முடியாது என யூகித்த போலீசார், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சில மணி நேரம் தேடிய பிறகு, இறந்த நிலையில் தினேஷ்குமார் உடலை கண்டெடுத்தனர். தினேஷ்குமார் மீது 8 திருட்டு வழக்குகள் உள்ளன. அவரது இறப்பு குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடந்தது. இந்நிலையில் தினேஷ்குமாரை போலீசார் அடித்துக்கொலை செய்ததாக கூறி அவரது உறவினர்கள் நேற்று மதியம் அண்ணாநகர் ஸ்டேஷனை முற்றுகையிட்டு மறியிலில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை