முதிய தம்பதிக்கு கத்திக்குத்து பட்டதாரி வாலிபருக்கு கம்பி
மயிலாடுதுறை:முதிய தம்பதியை கத்தியால் குத்திய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம், மதுரா நகர் அருகே உள்ள டெலிகாம் நகரைச் சேர்ந்தவர் சேதுமாதவன், 65; பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி நிர்மலா, 61; ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர்களின் இரு மகள்களும் வெளியூரில் உள்ளனர்.சேதுமாதவன் குடும்பத்திற்கும், எதிர் வீட்டில் வசிக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உதவியாளர் ராஜேந்திரன் குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்துள்ளது.நேற்று காலை நிர்மலாவிடம், வீட்டு வாசலில், பொறியியல் பட்டதாரியான ராஜேந்திரன் மகன் பிரேம், 25, தகராறு செய்துள்ளார். அதை நிர்மலா கண்டித்ததால், ஆத்திரமடைந்த பிரேம், கத்தியால் நிர்மலாவை சரமாரியாக குத்தியுள்ளார்; தடுக்க முயன்ற சேதுமாதவனையும் குத்தினார்.அங்கிருந்தோர், படுகாயமடைந்த தம்பதியை தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பொதுமக்கள் பிரேமை பிடித்து, மயிலாடுதுறை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து, பிரேமை கைது செய்து விசாரிக்கின்றனர்.