சிறுமி வன்கொடுமை விவகாரம் சர்ச்சையாக பேசிய மயிலாடுதுறை கலெக்டர் மாற்றம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள அங்கன்வாடியில், மூன்றரை வயது சிறுமி, கடந்த 24ம் தேதி மதிய உணவு இடைவேளையில் கை கழுவ சென்று மாயமானார். ஆசிரியர் மற்றும் உதவியாளர் தேடியபோது, அருகில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தலை மற்றும் முகத்தில் கற்களால் தாக்கப்பட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பாலியல் பலாத்கார முயற்சியில் தாக்கப்பட்டதாக கூறப்பட்டது. மீட்கப்பட்ட சிறுமி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனை, சீர்காழி மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.இந்நிலையில், மயிலாடுதுறையில் நேற்று போலீசாருக்காக நடந்த போக்சோ சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி முகாமை, கலெக்டர் மகாபாரதி துவக்கி வைத்தார்.அப்போது அவர், குழந்தைகளை போலீசார் எப்படி அணுக வேண்டும்; பெற்றோர் குழந்தைகளுக்கு எந்த மாதிரி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது குறித்து பேசினார். தொடர்ந்து, 'கடந்த வாரம், மூன்றரை வயது சிறுமிக்கு நடந்த சம்பவத்தில் கூட, அந்த குழந்தை தப்பா நடந்திருக்கு. அதை நீங்கள் கவனித்து பார்த்தீர்கள் என்றால் தெரியும். எனக்கு கிடைத்த அறிக்கைப்படி, காலையில் அந்த பையன் முகத்தில் அந்த குழந்தை எச்சில் துப்பியுள்ளது. அதனால் இருபக்கமும் நாம் பார்க்க வேண்டியுள்ளது' என்றார்.கலெக்டரின் இந்த சர்ச்சை பேச்சு இணையத்தில் பரவ, மா.கம்யூ., கட்சி கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவித்தது. பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்தனர்.இதையடுத்து, கலெக்டர் மகாபாரதி இடமாற்றம் செய்யப்பட்டு, ஈரோடு மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டார்.