3 குழந்தைகளின் தாய் மர்ம சாவு உறவினர்கள் மறியலால் பதட்டம்
மயிலாடுதுறை:சீர்காழி அருகே மூன்று குழந்தைகளின் தாயின் இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த அகர எழுத்துார் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு,42; லாரி டிரைவர். இவரது மனைவி சுகன்யா,31, திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சுகன்யா வீட்டில் மர்மமான முறையில் துாக்கில் இறந்து கிடந்தார். கொள்ளிடம் போலீசார், சுகன்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில், சுகன்யாவில் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அவரது கணவரை கைது செய்ய வலியுறுத்தியும் உறவினர்கள் நேற்று காலை சீர்காழி அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி., ராஜ்குமார் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம், பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதையேற்று மறியல் கைவிடப்பட்டது.