உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / பரசலுார் கோவில் கும்பாபிஷேகம் அமைச்சர், ஆதீனங்கள் பங்கேற்பு

பரசலுார் கோவில் கும்பாபிஷேகம் அமைச்சர், ஆதீனங்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை:பரசலூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் அமைச்சர், ஆதீனங்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் அருகே பரசலூர் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இளம் கொம்பனையாள் சமேத வீரட்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 14 ஆண்டுகளான நிலையில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன.கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை கடந்த 27ம் தேதி தொடங்கின. நேற்று காலை 6ம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடாகி, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மதுரை ஆதீனம் 293 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103 வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் 234 வது குருமா சன்னிதானம் நாகராஜ் சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சார சுவாமிகள் மற்றும் ஆதீன கட்டளை தம்புரார்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி மகா தீபாராதனை காட்டினர்.கும்பாபிஷேகத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கலெக்டர் மகாபாரதி, எஸ்.பி., ஸ்டாலின், சுதா எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் நிவேதா எம் முருகன், ராஜகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ