உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / உயிர்போகும் வரையில் உண்ணாவிரதம் தருமை ஆதீனம் அறிவிப்பால் பரபரப்பு

உயிர்போகும் வரையில் உண்ணாவிரதம் தருமை ஆதீனம் அறிவிப்பால் பரபரப்பு

மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தால் கட்டப்பட்ட இலவச மருத்துவமனையை இடிப்பதை கண்டித்து, ''உயிர் போகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்,'' என, தருமபுரம் ஆதீனம் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை, சின்னக்கடை வீதியில், பொதுமக்களின் மருத்துவ வசதிக்காக, தருமபுரம் ஆதீனம் சார்பில் இலவச மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, 24வது குருமஹா சன்னிதானம் சண்முகதேசிக சுவாமிகள், 1943ல் அப்போதைய கவர்னரை அழைத்து பூமி பூஜை செய்தார். கட்டுமான பணிகள் முடிந்து, 25வது குருமஹா சன்னிதானம், 1951ல் இலவச மருத்துவ சேவையை துவக்கி வைத்தார். மயிலாடுதுறை நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் அதிகளவில் சிகிச்சை பெற்றனர். முக்கியமாக மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், நகராட்சி நிர்வாகத்திடம் மருத்துவமனை ஒப்படைக்கப்பட்டு, 25 ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கட்டடம் சிதிலமடைந்ததை அடுத்து கூறைநாடு பகுதியில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு, அங்கு இடமாற்றம் செய்யப்பட்டது. சண்முக தேசிக சுவாமிகள் இலவச மருத்துவமனை கட்டடம் மூடப்பட்டு பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், தருமபுரம் ஆதீனம் 27வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், 2023ல் இந்த மருத்துவமனையை மீண்டும் அதே இடத்தில் இயக்கி, மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய முயற்சி மேற்கொண்டார். பாழடைந்த கட்டடத்தையும் அவர் பார்வையிட்டார். இந்நிலையில், கட்டடத்தை நகராட்சி நிர்வாகம் இடிக்கப்போவதாக தகவல் வெளியானதால் ஆத்திரமடைந்த அவர், இதை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முகநுாலில் அறிவித்தார். அறநிலையத்துறை அமைச்சர், ஆதீனத்திடம் பேசியதை தொடர்ந்து, முகநுால் பதிவை ஆதீனம் நீக்கினார். இந்நிலையில், நேற்று மதியம், தருமபுரம் ஆதீனம் தனது முகநுால் பதிவில், 'மயிலாடுதுறையில், 24வது குருமஹா சன்னிதானத்தால் அடிக்கல் நாட்டப்பட்டு, அப்போதைய முதல்வர் குமாரசாமி ராஜா திறந்து வைத்த இலவச மகப்பேறு மருத்துவமனையை, இடிக்கப்போவதாக தகவலறிந்து, தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. 'தற்போது அந்த இடத்தில் மீண்டும் பூமிபூஜை போடுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் உயிர்போகும் வரை உண்ணாவிரதம் இருந்து முன்னோர்கள் கட்டியதை காப்போம்' என, தெரிவித்துள்ளார். தருமை ஆதினத்தின் இந்த அதிரடி பதிவு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், 'தி.மு.க., அரசு கோவில் சொத்துக்களையும், ஆதீன சொத்துக்களையும், அத்துமீறி ஆக்கிரமிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தை, ஆதீனத்திடமே ஒப்படைக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை