உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / சீர்காழி இரட்டை கொலை வழக்கில் தலைமறைவானவர் 3 ஆண்டுக்கு பின் கைது

சீர்காழி இரட்டை கொலை வழக்கில் தலைமறைவானவர் 3 ஆண்டுக்கு பின் கைது

மயிலாடுதுறை: சீர்காழி இரட்டை கொலை வழக்கில் தலைமறைவான முக்கிய குற்றவாளி, ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் அடகு கடை நடத்தி வந்தவர் ராஜஸ்தானை சேர்ந்த தன்ராஜ் சவுத்ரி. கடந்த 2021 ஜனவரி 27ம் தேதி, இவரது வீட்டிற்குள் புகுந்த கும்பல், தன்ராஜ் சவுத்ரியின் மனைவி ஆஷா, மகன் அகில் இருவரையும் படுகொலை செய்து விட்டு, வீட்டில் இருந்த 12.5 கிலோ தங்க நகைகள், ரூ 6.75 லட்சம் பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பி சென்றது. சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மணிஷ், ரமேஷ் பட்டேல், மஹிபால், கருணா ராம் ஆகிய 4 பேரை கைது செய்தனர். போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற மஹிபால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. வழக்கு விசாரணையில் மணிஷ், கருணா ராம் ஆகிய இருவர் மட்டும் ஆஜராகினர். ரமேஷ் பட்டேல் தலைமறைவானார். இந்நிலையில் கடந்த ஏப்., 22ம் தேதி மணிஷ், கருணாராம் ஆகியோருக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இந்நிலையில் நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ரமேஷ் பட்டேல், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. சீர்காழி போலீசார் ராஜஸ்தான் சென்று நேற்று முன்தினம் ரமேஷ் பட்டேலை, 33; கைது செய்து சீர்காழி அழைத்து வந்தனர். மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ