காரியம் சிறுசு; மனசு ரொம்ப பெருசு தாகம் தீர்த்தார் சுமை துாக்கும் தொழிலாளி
நாகப்பட்டினம்:நாகையில், குடிநீர் இன்றி தவித்த கிராம மக்களுக்கு, தன் சொந்த செலவில், சுமை துாக்கும் தொழிலாளியான, முன்னாள் வார்டு கவுன்சிலர் குடிநீர் வழங்கிய செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.நாகை மாவட்டம், கருவேலங்கடை ஊராட்சியில் ஆறு வார்டுகள் உள்ளன. இதில், 1வது வார்டு, மேல செட்டிச்சேரி பகுதியில் 170 விவசாய கூலி தொழிலாளர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த வார்டில் கவுன்சிலராக பொறுப்பு வகித்தவர் கதிரவன், 44; சாதாரண சுமை துாக்கும் தொழிலாளி. இப்பகுதி ஊராட்சி பொது குடிநீர் குழாயில், ஐந்துநாட்களாக குடிநீர் வரவில்லை. மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.இதையடுத்து, கதிரவன் தன் சொந்த செலவில், ஒரத்துாரில் இருந்து டிராக்டரில் குடிநீர் கொண்டு வந்து, 1வது வார்டு மக்களுக்கு இலவசமாக வழங்கினார். ஐந்து நாட்களாக குடிநீர் இன்றி தவித்த மக்கள் திடீர் குடிநீர் வரவால் மகிழ்ச்சி அடைந்தனர்.கதிரவன் கூறுகையில், ''எங்கள் பகுதி மக்கள் அனைவரும் கூலி தொழிலாளிகள். பணம் கொடுத்து தண்ணீர் கேன் வாங்க முடியாது. அருகில் உள்ள குளத்தில் இருந்து தண்ணீரை எடுத்து வடிகட்டி குடித்தனர். ஊராட்சி நிர்வாகம் இருந்தால் கேட்க முடியும். இப்போது யாரிடம் கேட்பது? ''பல கி.மீ., துாரம் சென்று அதிகாரிகளிடம் கேட்டாலும் பலனிருக்காது. தொடர்ந்து என்னால் குடிநீர் வழங்க முடியாது. சுமை துாக்கும் தொழிலாளியிடம் அவ்வளவு பணம் இல்லை. இன்று என்னால் முடிந்ததை செய்தேன்,'' என்றார்.