உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / தெருவுக்கு ஹனிபா பெயர் சூட்ட நாகூர் முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு

தெருவுக்கு ஹனிபா பெயர் சூட்ட நாகூர் முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு

நாகப்பட்டினம்:தி.மு.க., பிரசார பாடகராக பிரசித்தி பெற்றவர் ஹனிபா. ராமநாதபுரத்தில் பிறந்த இவர், நாகூரில் வசித்தார். இவரது நுாற்றாண்டு விழாவை அரசு சார்பில் கொண்டாட வேண்டும் என, நாகை எம்.எல்.ஏ., ஷாநவாஸ் சட்டசபையில் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, நாகூர் தைக்கால் தெருவிற்கு 'இசை முரசு இ.எம்.ஹனிபா தெரு' என்றும், புதிதாக அமைய உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவிற்கு 'இசை முரசு இ.எம்.ஹனிபா நுாற்றாண்டு நினைவு பூங்கா' என்றும் பெயர் சூட்டி, முதல்வர் ஸ்டாலின் கடந்த 18ம் தேதி அரசாணை வெளியிட்டார்.முதல்வரின் அறிவிப்பு நாகூர் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.'நாகூரின் வரலாறு தெரியாமல் முதல்வர் அறிவித்துள்ளார். நுார்சா தைக்கால் தெருவை பெயர் மாற்றம் செய்யக்கூடாது' என, முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைத்தளங்களில் கருத்தை பதிவிட்டு, அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.நாகூர் சமூக சேவகர் சித்திக் கூறியதாவது:ஹாஜி நுார் சாஹிப் வலியுல்லா என, இப்பகுதி மக்களால் 900 ஆண்டுகளுக்கும் மேலாக போற்றப்படும் மஹானான நுார்சா, நாயகம் வழித்தோன்றல் சீடர். பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் எனப்படும் செய்யது சாஹுல் ஹமீது பாதுஷா நாயகம், 470 ஆண்டுகளுக்கு முன்பே அடக்கமாகியிருக்கும் மஹான் அடக்கஸ்தலம் சென்று பாத்திஹா ஒதி வழிபட்டுள்ளார்.ஹாஜி நுார் சாஹிப் காலத்தில் நாகூரில் காலரா தொற்று நோயால் மக்கள் பாதித்த போது, அப்பகுதிகளில் மஹான் குதிரையில் வலம் வந்தார். உடன் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் குணமடைந்ததாக வரலாறு. இதை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் தாபூத்து எனும் மலர் மாலைகள் குதிரையில் வைத்து முக்கிய வீதிகள் வழியே எடுத்து செல்லப்பட்டு, மஹானின் அடக்க ஸ்தலத்தில் போர்வை போற்றப்பட்டு துவா ஓதப்படும். பெரிதும் மதிக்கப்படுகிற மஹான் பெயரில் உள்ள நுார்சா தைக்கால் தெருவை பெயர் மாற்றம் செய்யக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை