ஒராண்டாக ஜவ்வாக இழுக்கும் மருத்துவக்கல்லுாரி சாலை நாகையில் அலட்சிய அதிகாரிகள், அவதியில் நோயாளிகள்
நாகப்பட்டினம்:நாகையில் அதிகாரிகளின் அலட்சியத்தால், மருத்துவமனை சாலை அமைக்கும் பணி முடியாமல் ஓராண்டாக ஜவ்வாக இழுப்பதால், நோயாளிகள் அவதி தொடர்கிறது.நாகப்பட்டினம் மாவட்டத்தில், ஒரத்துார் என்ற இடத்தில் புதிதாக மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கட்டப்பட்டு, கடந்த ஆண்டு ஏப்., 24 ம் தேதி திறக்கப்பட்டது. அதையடுத்து, நாகை நகரின் மத்தியில் இயங்கி வந்த அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டது. மருத்துவக் கல்லூரியில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவு மட்டும் பழைய நாகை அரசு மருத்துவமனையில் இயங்கி வருகிறது.இரவு நேரத்தில் அவசர சிகிச்சை உட்பட அனைத்து சிகிச்சைகளுக்கும், நாகையில் இருந்து 15 கி.மீ., தூரமுடைய மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. நாகை மற்றும் சுற்றுபுற பகுதிகளில் இருந்து மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு செல்ல போதிய வாகன வசதி, சாலை வசதி இல்லாமல் ஏழை, எளிய மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.ஆத்திரமடைந்த பொதுமக்கள், சாலை மற்றும் போக்குவரத்து வாகன வசதி கேட்ட, பலவித போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் விளைவாக இரண்டொரு நகர பஸ்கள் பகலில் இயக்கப்படுகிறது. வேளாங்கண்ணி செல்லும் இ.சி.ஆர்., சாலையில், ஏறும் சாலை என்ற இடத்தில் இருந்து ஒரத்தூர் வரை செல்லும் கிராம சாலை, வளைந்து, நௌிந்து செல்ல வேண்டியுள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அழைத்து செல்லப்படும் நோயாளிகள் அவசரமாக கொண்டு செல்ல முடிவதில்லை.நாகை- வேளாங்கண்ணி சாலையில் இருந்து ஓரத்துார் பிரிவு சாலை, 3 கி.மீ., துாரம் 10 மீட்டர் அகலத்திற்கு, மாநில நெடுஞ்சாலை துறை மூலம் விரிவாக்கம் செய்ய, 26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் அமைச்சர் வேலு, பணிகளை துவக்கி வைத்தார்.3 கி.மீ., தூரம் சாலை அமைக்கும் பணிகள் துவங்கி ஓராண்டுக்கும் மேலாகியும்,50 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. இதனால், நோயாளிகள் மற்றும் மருத்துவமனை டாக்டர்கள் முதல் ஊழியர்கள் வரையில் அவதியடைந்து வருகின்றனர்.நாகை மாவட்ட நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் நாகராஜன் கூறுகையில், கடந்த பிப்ரவரியில் பணிகளை துவக்கியவுடன், 20 சிறிய பாலம் பணிகளை (கல்வெர்ட்) விரைந்து முடித்தோம். வருவாய் துறையினர் மிக தாமதமாகத்தான் நிலம் கையகப்படுத்தி ஒப்படைத்தனர். சாலை அமைக்க மணல் எடுக்கும் அனுமதி கடந்த செப்., மாதம் தான் கிடைத்தது.மண் எடுக்கும் பணிகளை துவக்கும் முன் பருவமழை துவங்கி விட்டது. மழையினால் நிறுத்தப்பட்ட பணிகள் இவ்வாண்டு பிப்ரவரியில் முழு வீச்சில் துவங்கி நடந்து வருகிறது. மே மாதம் அல்லது ஜூன் மாதம் இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என்றார்.மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஊழியர்கள் கூறுகையில், குக்கிராமமான ஓரத்தூரில் தங்கும் வசதி, உணவு போன்ற எதுவும் கிடைக்காத நிலையில் நாகையில் இருந்து தான் சென்று திரும்ப வேண்டியுள்ளது. குறுகலான சாலை, கும்மிருட்டு, விஷ ஜந்துக்கள் நடமாட்டம் என உயிரை கையில் பிடித்தப்படி இரவு பணிக்கு செல்கிறோம். பெண் ஊழியர்கள் நிலை மிக பரிதாபம். என்றனர்.