மேலும் செய்திகள்
டூவீலரில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி
02-Sep-2024
நாகப்பட்டினம்:நாகையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தி.மு.க., - பஞ்., தலைவர் போலீஸ் ஸ்டேஷனிலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.நாகை மாவட்டம், தெற்கு பொய்கைநல்லுார் ஊராட்சியில் 5,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பஞ்சாயத்து தலைவராக தி.மு.க.,வைச் சேர்ந்த மகேஸ்வரன், 44, உள்ளார்.கடந்த 2022ல், வேளாங்கண்ணியில், பைனான்சியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின்படி, மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியில் வந்துள்ளார். இவரது உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக, சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, வேளாங்கண்ணி போலீசார், இவரை ஊருக்குள் வரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.இதனால் கிராமசபா கூட்டங்கள் நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டதால், அரசின் திட்டங்கள் எதுவும் தெற்கு பொய்கைநல்லுார் ஊராட்சிக்கு சென்றடையவில்லை. ஊராட்சி மக்களின் அடிப்படை தேவை கருதி, கடந்த சுதந்திர தினத்தன்று, ஆன்லைன் மூலமாக எல்.இ.டி., திரை வாயிலாக கிராம சபா கூட்டம் நடந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் பஞ்., அலுவலகம் அருகே மகேஸ்வரன் கார் கண்ணாடியை சிலர் அடித்து உடைத்தனர். இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த மூவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.வீட்டில் இருந்த பஞ்., தலைவர் மகேஸ்வரனை, வேளாங்கண்ணி போலீசார் விசாரணைக்கு என அழைத்துச் சென்று கீழ்வேளூர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருந்தனர். காலை முதல் இரவு வரை தனிமையில் வைத்து விசாரணை செய்ததால் மன உளைச்சலான மகேஸ்வரன், கழிப்பறைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர், மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். நீண்ட நேரமாகியும் வராததால், சந்தேகமடைந்த போலீசார், கழிப்பறை கதவை உடைத்து திறந்தனர். மயங்கி கிடந்த மகேஸ்வரனை மீட்டு, நாகை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பஞ்., தலைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விசாரணைக்கு சென்ற தி.மு.க., பஞ்., தலைவர் போலீஸ் ஸ்டேஷனிலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
02-Sep-2024