ஆசிரியர் தாக்கியதில் மாணவர் படுகாயம்: பெற்றோர் புகார்
நாகப்பட்டினம்:நாகையில் ஆசிரியர் தாக்கியதில் படுகாயம் அடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆசிரியர் மீது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். நாகையை சேர்ந்தவர் முருகானந்தம். 46; கப்பலில் மாலுமி. இவரது, 17 வயது மகன், நாகையில், தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். நேற்று முன்தினம் மதியம், உணவு இடைவேளையின் போது, 17 வயது மாணவனை, உடற்கல்வி ஆசிரியர் தினேஷ்குமார் அழைத்துள்ளார். ஆசிரியரை சந்தித்த மாணவனை, சக மாணவர்கள் முன்னிலையில் திட்டி, சரமாரியாக தாக்கியுள்ளார். அடி தாங்காமல் அதிர்ச்சியடைந்த மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. வீடு திரும்பிய மாணவன் உடல் முழுதும் காயங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு, மாணவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாணவனின் பெற்றோர் புகாரின்படி, வெளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.