கோர்ட் நடவடிக்கையில் பங்கேற்பு மாணவ, மாணவிகள்
நாகப்பட்டினம்:நாகையில்,8 ம் வகுப்பு பயிலும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்கள் நீதிமன்றத்தில் ஒரு மணி நேரம் அமர்ந்து வழக்கு விசாரணை நடவடிக்கைகளை பார்வையிட்டவர்கள், நீதிபதிகளாகி கிராமங்களை முன்னேற்ற உழைப்போம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.நாகை மாவட்டம் ஒரத்தூரில் சிதம்பரனார் அரசு உதவிப் பெறும் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 1923 ம் ஆண்டு துவக்கப்பட்ட பள்ளியில் தற்போது 131 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.8 ம் வகுப்பு சமூக அறிவியலில், நீதித்துறை என்ற பாடப்பிரிவு உள்ளது. நீதித்துறையின் செயல்பாடு குறித்து நேரில் பார்த்து தெரிந்துக்கொள்ள ஆசைப்பட்ட மாணவ, மாணவிகள் 23 பேரும், நீதிமன்ற நடவடிக்கைகளை நேரில் பார்க்க அனுமதி கோரி நாகை மாவட்ட முதன்மை நீதிபதிக்கு கடிதம் எழுதினர். மாணவர்கள் நீதிமன்றத்திற்கு வருகை தருமாறு நீதிபதி கந்தகுமார் அனுமதி வழங்கினார்.அதனையேற்று வகுப்பாசிரியர் பாலசண்முகம் தலைமையில் 9 மாணவிகள் உட்பட 20 பேர் நேற்று நாகை நீதிமன்றம் சென்றனர். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சிவகுருநாதன் மாணவர்களை, வரவேற்று நீதிமன்ற வளாகத்தில் அமர வைத்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி ராமச்சந்திரன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் நடந்தது. ஒரு மணி நேரம் நீதிமன்ற நடவடிக்கைகளை மாணவர்கள் பார்வையிட்டனர். நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து மாணவ, மாணவிகள் சந்தேகங்களுக்கு அரசு வழக்கறிஞர் சிவகுருநாதன் விளக்கினார்.மாணவ, மாணவிகள் கூறுகையில், எங்களைப் போன்ற கிராமப்புற மாணவர்கள் சினிமாவில் தான் நீதிமன்றத்தை பார்த்திருக்கிறோம். நீதிமன்றத்தில் பங்கேற்றது வியப்பாக உள்ளது. சினிமாவில் பார்ப்பதற்கும் நேரிடையாக பார்ப்பதற்கும் எதார்த்தம் புரிகிறது. நீதிமன்ற நடவடிக்கை எங்களுக்கு தூண்டுகோலாக உள்ளது நாங்களும் படித்து நீதிபதிகளாகி, கிராமங்கள் மேம்பட நிச்சயமாக பாடுபடுவோம் என நெகிழ்ச்சியுடன் கூறினர்.