கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு பரமத்தி டவுன் பஞ்., முன் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு பரமத்தி டவுன் பஞ்., முன் பா.ஜ., ஆர்ப்பாட்டம்ப.வேலுார்: பரமத்தி, ப.வேலுார் டவுன் பஞ்., பகுதிகளில் செல்லும் கழிவுநீரை மாணிக்கநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள காலாவதி கல்குவாரியில் தேக்கி, சுத்திகரிப்பதற்கான பணிகள் நடந்து வந்தன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணிக்கநத்தம், கோப்பணம்பாளையம், வீரணம்பாளையம், இருக்கூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இந்த திட்டம் மாவட்ட நிர்வாகத்தால் கைவிடப்பட்டது.அதை தொடர்ந்து, பரமத்தியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்து, பரமத்தி பழைய பைபாஸ் சாலையில் உள்ள, பி.எஸ்.என்.எல்., அலுவலகத்துக்கும், திருமணி முத்தாற்றுக்கும் இடையே இடம் தேர்வு செய்யப்பட்டது.இந்த இடம் அரசு புறம்போக்கு நிலம் என்றாலும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும்.இதனால் விவசாயம், குடிநீர் ஆதாரம் கேள்விக்குறியாகும் எனக்கூறி பரமத்தி, ஓவியம்பாளையம், வெள்ளாளபாளையம், கீழக்கரை பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பரமத்தி டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில், நேற்று மன்ற கூட்டம் நடந்தது. இதையறிந்த பா.ஜ.,வினர், பரமத்தியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, டவுன் பஞ்., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோரிக்கை மனுவை டவுன் பஞ்சாயத்து அதிகாரியிடம் அளித்தனர்.பரமத்தி ஒன்றிய, பா.ஜ., தலைவர் அருண், நாமக்கல் மாவட்ட துணைத்தலைவர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.