தொகுதி சீரமைப்பு நடந்தால் தமிழகத்திற்குபெரும் பாதிப்பு: எம்.பி., ராஜேஸ்குமார்
தொகுதி சீரமைப்பு நடந்தால் தமிழகத்திற்குபெரும் பாதிப்பு: எம்.பி., ராஜேஸ்குமார்ராசிபுரம், ;''-மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி சீரமைப்பு நடந்தால், தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும்,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் கூறினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்பதை திணித்து வருகிறது. இதனால் பல்வேறு கலாசாரங்கள் அழிந்து விடும். கூட்டாட்சி தத்துவம் சிதைந்து விடும். தற்போது, பா.ஜ., மக்கள் தொகை அடிப்படையில், தொகுதி மறுவரை செய்ய திட்டமிட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் செய்தால், ஹிந்தி பேசும் மாநிலங்களில், எம்.பி., தொகுதி அதிகரித்து விடும். தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் தொகுதிகள் குறைந்துவிடும். உத்தரபிரதேசத்தில், 80 தொகுதிகள், 143 தொகுதிகளாகவும்; பீஹாரில், 40 தொகுதிகள், 79 ஆகவும்; மத்தியபிரதேசத்தில், 29 தொகுதிகள், 52 ஆகவும் உயர்ந்து விடும். தமிழகத்தில், 39 தொகுதிகள், 31 ஆக குறைந்துவிடும். இதனால், ஹிந்தி பேசும், பத்து மாநிலங்களில் மட்டுமே ஓட்டு வாங்கி, பா.ஜ., அரசு எளிதில் மத்தியில் ஆட்சி அமைத்துவிடும். ஏற்கனவே, ஹிந்தி பேசாத மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தும், பா.ஜ., தொகுதி மறுவரை செய்தால், தென்னிந்திய மாநிலங்களை முற்றிலும் புறக்கணித்து விடும். மாநில உரிமையை மீட்க, தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். மாநில உரிமையை மீட்க, பாதுகாக்க, தி.மு.க., அரசு மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையை எதிர்க்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.