கனிமங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்குஇ-பர்மிட், குவாரி குத்தகை உரிமம் பெற அழைப்பு
கனிமங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்குஇ-பர்மிட், குவாரி குத்தகை உரிமம் பெற அழைப்புநாமக்கல்:'கனிமங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு, இ-பர்மிட், குவாரி குத்தகை உரிமம் பெற, இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், சேந்தமங்கலம், மோகனுார், ராசிபுரம், திருச்செங்கோடு, ப.வேலுார் மற்றும் குமாரபாளையம் ஆகிய தாலுகாக்களில், கிராவல், சாதாரண கற்கள், கிரானைட் குவார்ட்ஸ், பெல்ஸ்பர் ஆகிய கனிமங்களுக்கு, குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு குவாரி பணிகள் நடந்து வருகின்றன. அவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ள குவாரிகளிலிருந்து வெட்டியெடுத்து, அரசுக்கு உரிய கட்டணங்கள் செலுத்தி, வாகனங்களில் ஏற்றிச்செல்லும் கனிமங்களுக்கு, நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை, உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாக வழங்கப்பட்ட அச்சு வழித்தட சீட்டுகளை, வரும், 15 முதல், mimas.tn.gov.inஎன்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து, பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய சீட்டுகள் மூலம் கனிமங்கள் எடுத்துச்செல்ல வேண்டும் என்ற நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது.இதன் மூலம், அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச்செல்வது மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் கூடுதலாக கனிமங்களை எடுத்துச்செல்வதை தடுக்கவும், கண்காணிக்கவும் அரசுக்கு வருவாய் இழப்பை தடுக்கும் நோக்கிலும் நடைமுறைப்படுத்த உள்ள இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்க குத்தகைதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.மேலும், மாநிலம் முழுவதும் குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்கள், இணையதளம் வாயிலாக பெறப்பட்டு, பரிசீலனை செய்து குத்தகை உரிமம் அனுமதி வழங்குவது தொடர்பாக படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், வரும், 21 முதல், அரசு புறம்போக்கு மற்றும் தனி நபர் பட்டா நிலங்களில் உள்ள பல்வேறு வகையான கனிமங்களுக்கு, குவாரி குத்தகை உரிமம், அனுமதி கோரும் விண்ணப்பங்கள், இணைய வழியாக மட்டுமே விண்ணப்பித்து பரிசீலனை செய்து அனுமதி வழங்கப்படும்.வரும், 21 முதல், இணையதளம் வாயிலாக மட்டுமே குவாரி குத்தகை கோரும் விண்ணப்பங்கள், சுரங்க நிலுவை தொகை சான்றிதழ் கோரும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்படும் தாமதத்தை தவிர்த்து, குத்தகைதாரர்களுக்கு விரைவு சேவைகள் வழங்க, அரசால் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பித்து வழங்க உள்ள, 13 வகையான சேவைகளை பெற்று அனைத்து விண்ணப்பதாரர்களும் பயன்பெறலாம்.கனிம விதிகளுக்கு முரணாக, அரசு அனுமதியின்றி எடுத்துச்செல்லப்படும் அனைத்து கனிமங்களும், அரசால் வழங்கப்படும் வழித்தட சான்றுகளில், விதிகளுக்கு முரணாக திருத்தங்கள் செய்தும், அனுமதி வழங்கப்படாத பகுதிகளிலிருந்து கனிமங்கள் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வாகனங்கள் கைப்பற்றுவதுடன், வாகன உரிமையாளர், டிரைவர், குவாரி உரிமையாளர் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.