உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குடியிருப்பு பகுதியில் இளைஞர்கள் அட்டகாசம்

குடியிருப்பு பகுதியில் இளைஞர்கள் அட்டகாசம்

பள்ளிப்பாளையம் : ''குடியிருப்பு பகுதியில் மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்யும் இளைஞர்களால், அங்கு வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பில்லை,'' என, நகர்மன்ற கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர் ஆவேசமாக பேசினார்.பள்ளிப்பாளையம் நகராட்சி சாதாரண கூட்டம், நேற்று நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில், துணைத்தலைவர் பாலமுருகன் முன்னிலையில் நடந்தது.கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:கோபாலகிருஷ்ணன், அ.தி.மு.க.,: ஜீவாசெட் பின்புற பகுதியில், இரவு, 8:00 மணி முதல் நள்ளிரவு, 12:00 மணி வரை, 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், வெட்ட வெளியில் அமர்ந்து மது அருந்துகின்றனர். பின், சண்டையிட்டுக்கொள்கின்றனர். இதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. நடவடிக்கை எடுக்க வேண்டும்.சரவணன், அ.தி.மு.க.,: பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் நகராட்சி பகுதிக்கு என தனியாக போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். சசிகுமார், தி.மு.க.,: எனது வார்டில் குடிநீர் பணிக்கு சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, 2 மாதமாகிவிட்டது. இன்னும் பணி முடியவில்லை. பள்ளமும் மூடவில்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.சிவம், ம.தி.மு.க.,: ஒட்டமெத்தை சாலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. நெடுஞ்சாலைதுறையில் புகாரளித்தால், அலட்சியமாக உள்ளனர். சுஜாதா, அ.தி.மு.க.,: எனது வார்டில் குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாக சாலையில் பாய்ந்து வருகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என, போட்டோ எடுத்து அனுப்பியும், இன்னும் சீரமைக்கவில்லை.செல்வராஜ், நகராட்சி தலைவர்: குடியிருப்பு பகுதியில் மது அருந்தும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பள்ளிப்பாளையம் போலீசுக்கு நகராட்சி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். சாலைப்பணிகளை விரைவாக முடிக்கப்படும்.பாலமுருகன், துணைத்தலைவர்: குடிநீர் பணிக்கு சாலையில் பள்ளம் தோண்டும் போது, நகராட்சியில் தெரிவிக்க வேண்டும். நகராட்சி பணியாளர்கள் எத்தனை பேர் உள்ளனர், அவர்கள் செய்யும் பணிகள், மொபைல் எண் போன்ற விபரங்களை கவுன்சிலருக்கு தெரிவிக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை