சட்ட திருத்தம்: வக்கீல்கள் போராட்டம்
நாமக்கல், மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, நாமக்கல்லில் வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், நாமக்கல் வக்கீல்கள் சங்க கூட்டுக்குழு சார்பில், போராட்டம் நடந்தது. துணைத்தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். போராட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். சட்டங்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். சமஸ்கிருதத்தை புகுத்த கூடாது. மத்திய, மாநில அரசுகள் வக்கீல்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பி மனது சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.* குமாரபாளையம் வக்கீல்கள் சங்கம் சார்பில், 2வது நாளாக நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், சங்க செயலர் நடராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் துணைத்தலைவர் தீனதயாளன், இதே அமைப்பின் துணைச்செயலர் ஐயப்பன், குமாரபாளையம் வக்கீல்கள் சங்க பொருளாளர் நாகப்பன் உள்பட பலர் பங்கேற்றனர். * திருச்செங்கோடு வக்கீல்கள், நீதிமன்ற புறக்கணிப்பு செய்து ஒருங்கிணைந்தை நீதிமன்ற வளாகம் முன் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், இந்த சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் எனக்கூறி, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.