வி.ஏ.ஓ.,க்கள் சஸ்பெண்ட் ரத்து காத்திருப்பு போராட்டம் வாபஸ்
நாமக்கல்:வி.ஏ.ஓ.,க்களின் 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இரண்டு நாட்களாக நடந்து வந்த மாவட்ட வி.ஏ.ஓ.,க்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.நாமக்கல் மாவட்டம், கரடு புறம்போக்கில், அனுமதியின்றி கல்குவாரி இயங்கியது. இதுகுறித்து, முன்கூட்டியே அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனக்கூறி, கொண்டமநாயக்கன்பட்டி வி.ஏ.ஓ., ஜான்பாஸ்கோ, விட்டமநாயக்கன்பட்டி வி.ஏ.ஓ., கோகிலா ஆகியோரை, நாமக்கல் ஆர்.டி.ஓ., பார்த்தீபன், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.இதனால், மாவட்ட வி.ஏ.ஓ.,க்கள், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி, 24, 25ம் தேதிகளில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, நேற்று ஆர்.டி.ஓ., முன்னிலையில், வி.ஏ.ஓ., மற்றும் வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் பேச்சு நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து, வி.ஏ.ஓ.,க்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டு நாட்களாக நடந்த காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, வி.ஏ.ஓ.,க்கள் பணிக்கு திரும்பினர்.