நேற்றுடன் மூடப்பட்ட 127 ஆண்டு கிளைச்சிறை
ராசிபுரம், ராசிபுரம் கிளைச்சிறை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1898ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமாக இருந்தபோது, சேலம் மத்திய சிறைக்கு பிறகு, ராசிபுரத்தில் கிளைச்சிறை தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் விசாரணை கைதிகளை சிறையில் அடைத்து வந்தனர். கொரோனா சமயத்திற்கு முன்பு, சிறார் விடுதியாகவும் செயல்பட்டு வந்தது. கிளைச்சிறை, 6 அறைகளுடன், 34 கைதிகளை அடைக்கும் வசதியுள்ளது. கண்காணிப்பாளர் தலைமையில், 13 காவலர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த ஆண்டு பாதுகாப்பு குறைவாகவும், போதிய வசதிகள் இல்லாத கிளைச்சிறைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இதில், தமிழகத்தில் ராசிபுரம் உள்ளிட்ட, 18 கிளைச்சிறைகளை மூட குழு பரிந்துரைத்தது. இதையடுத்து, ராசிபுரம் கிளைச்சிறையில் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர், எத்தனை கைதிகள் உள்ளனர், என்னென்ன வசதிகள் உள்ளன, அறைகள் விபரம் உள்ளிட்டவை குறித்து சிறைத்துறை அறிக்கையை பெற்று நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டது.கடந்த வாரம் சிறைத்துறை டி.ஐ.ஜி., உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து நேற்று சிறையில் இருந்த, 9 பேரும் நாமக்கல் கிளை சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து, 127 ஆண்டுகளாக இயங்கி வந்த கிளைச்சிறை நேற்றுடன் காலி செய்யப்பட்டுள்ளது.