உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆய்வுக்கு சென்ற கலெக்டரின் திடீர் உத்தரவால் வாகன ஓட்டிகள் 25 பேருக்கு ரூ.25,000 அபராதம்

ஆய்வுக்கு சென்ற கலெக்டரின் திடீர் உத்தரவால் வாகன ஓட்டிகள் 25 பேருக்கு ரூ.25,000 அபராதம்

நாமக்கல், நாமக்கல் - சேலம் புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்த கலெக்டர், இருசக்கர வாகனத்தில், 'ஹெல்மெட்' அணியாமல் சென்றவர்கள் மீது அபராதம் விதிக்க உத்தரவிட்டார். அதன்படி, 25 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.நாமக்கல் - சேலம் சாலை, புதன் சந்தை புறவழிச்சாலையில், அதிகளவில் வாகன விபத்து ஏற்பட்டு, உயிர் சேதமும், உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டும், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். அவற்றை தடுக்க அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரும் கோரிக்கை. அதையடுத்து, புறவழிச்சாலையில், விபத்து ஏற்படாத வகையில், பொம்மைக்குட்டை மேடு மற்றும் செல்லப்பம்பட்டி ஆகிய பகுதிகளில், பொதுமக்கள் எளிதாக சாலையை கடக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.அந்த இடத்தை, நாமக்கல் கலெக்டர் உமா, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள், 'ஹெல்மெட்' அணியாமல் சென்றதை பார்த்த கலெக்டர், அவர்களை நிறுத்தி, 'ஹெல்மெட்' அணிந்து சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.தொடர்ந்து, 'ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கவும்' கலெக்டர் உமா உத்தரவிட்டார். இதையடுத்து, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம், எஸ்.ஐ., வெங்கடேஷ், தலைமை காவலர் மதிவாணன் ஆகியோர், 'ஹெல்மெட்' அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.அதன்படி, 25 வாகனங்களுக்கு தலா, 1,000 ரூபாய் வீதம், 25,000 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது. ஆய்வுக்கு பின், மோகனுார் தாலுகா, எம்.மேட்டுப்பட்டியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், புதிய வீடுகள் கட்டும் பணிகளை கலெக்டர் உமா ஆய்வு செய்து, அங்குள்ள மக்களிடம், அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை