நாமக்கல் ஜி.ஹெச்.,ல் மேலும் 33 துாய்மை பணியாளர் டிஸ்மிஸ்
நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் மேலும், ௩௩ பேர் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர்.நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 'கிறிஸ்டல்' தனியார் நிறுவனம் மூலம், ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளர், பாதுகாவலர் என, 200க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். நேற்று முன்தினம், 88 பேரை, நிறுவனம் பணிநீக்கம் செய்தது. இதனால் அவர்கள் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உரிய சம்பளம் வழங்குவதில்லை. ஒப்பந்தப்படி கூறப்பட்டுள்ள வேலை நேரத்தைவிட கூடுதல் நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். வைப்பு நிதி, இ.எஸ்.ஐ., வரவு வைப்பதில்லை என, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும், 3௩ பேர் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர். இவர்கள், 121 பேரும் இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டத்தால் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் துாய்மை பணி பாதிக்கப்பட்டுள்ளது.