உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 7 மாதங்களில் ரூ.1.84 கோடி மதிப்பில் ரேஷன் பொருள் விற்ற 6,272 பேர் கைது

7 மாதங்களில் ரூ.1.84 கோடி மதிப்பில் ரேஷன் பொருள் விற்ற 6,272 பேர் கைது

நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, ஏழு மாதங்களில் பொது வினியோக திட்ட பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற, 6,272 பேரை கைது செய்து, 1.84 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு பொது வினியோக திட்டம் மூலம் அத்தியாவசிய பொருட்கள், குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறான பொருள்களை சிலர் முறைகேடாக வாங்கி கடத்திச்சென்று, கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர். இதை தடுக்கும் வகையில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, 2025 ஜன., 1 முதல் ஜூலை, 31 வரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையில், மொத்தம், 6,025 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில், 2,342 டன் பொது வினியோக திட்ட அரிசி, 13,720 லிட்டர் மண்ணெண்ணெய், 1,725 சமையல் காஸ் சிலிண்டர், இதர, 64 வழக்குகளுடன் அத்தியாவசிய பண்டங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு, 1.84 கோடி ரூபாயாகும். மேலும், இது சம்பந்தமாக, 6,272 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 70 பேர் குண்டர் சட்டத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !