கோவிலுக்கு வந்தபோது விபத்து;உயிர் தப்பிய குடும்பத்தினர்
பவானி:கர்நாடகா மாநிலம் மல்லேஸ்வரத்தில் வசிப்பவர் ஜெயகுமார், 38; அதே பகுதியில் வீட்டு உபயோக பொருள் தொழில் செய்கிறார். திருமணமாகி மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். புரட்டாசி அமாவாசை தினம் என்பதால், ஈரோடு மாவட்டம் கோபி அருகே வெள்ளாங்கோவிலில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு, ஜெயகுமார் மற்றும் அவரது அம்மா, மனைவி, இரண்டு குழந்தைகளுடன், மாருதி ஸ்விப்ட் காரில் ஜெயக்குமார் புறப்பட்டார். காரை அவரே ஓட்டினார். காலை, 9:35 மணியளவில், பவானி-அத்தாணி சாலையில் வந்தபோது ஜம்பை, கருக்குப்பாளையம் பாலம் அருகில் ஜெயக்குமார் துாங்கி விட்டதால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர திட்டில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயக்குமார், அவரது தாயாருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது.