மணல் அள்ளியதை தடுத்த பெண் அதிகாரி மீது தாக்கு
நாமக்கல்:முறைகேடாக மணல் அள்ளியதை தட்டிக்கேட்ட, வி.ஏ.ஓ.,வை வீடு புகுந்து தக்கியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி, வி.ஏ.ஓ.,க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் யூனியன், வையப்பமலை அடுத்த மொஞ்சனுாரை சேர்ந்தவர் சிவகாமி, 35. இவர், மல்லசமுத்திரம் யூனியன், பாலமேடு வி.ஏ.ஓ.,வாக பணியாற்றுகிறார். இவர் பணியாற்றும் பாலமேட்டில், உரிய அனுமதியின்றி கிராவல் மணல் அள்ளுவதாக, நேற்று முன்தினம் தகவல் வந்தது.சம்பவ இடத்துக்கு சென்ற வி.ஏ.ஓ., சிவகாமி, அதை தடுத்தார். அன்று இரவு, மொஞ்சனுாரில் உள்ள சிவகாமியின் வீட்டில் புகுந்து, அதே பகுதி சீனிவாசன் என்பவர், தகாத வார்த்தைகளால் திட்டி, அந்த பெண்ணை தாக்கியுள்ளார். அக்கம் பக்கத்தினர், சீனிவாசனை பிடித்து எலச்சிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். சீனிவாசனை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கிடையே, சீனிவாசனை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று காலை, 100க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக டி.ஆர்.ஓ., சுமன் உறுதியளித்தார். இதையடுத்து, வி.ஏ.ஓ.,க்கள் கலைந்தனர். இதே போல, திருச்செங்கோடு தாசில்தார் அலுவலகம் முன், வி.ஏ.ஓ.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.