100 ஆண்டு புளிய மரத்தை ஆசிட் ஊற்றி அழிக்க முயற்சி
ராசிபுரம், ராசிபுரம் அடுத்த ஆர்.குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன், 78; அதே பகுதியில், 2 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலம், தற்போது குருசாமிபாளையம் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவருக்கு சொந்தமாக உள்ளது. இந்த இடத்தில், வீட்டுமனை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். வீட்டுமனைக்கு செல்லும் நிலத்திற்கு வழியில், 100 ஆண்டு பழமை வாய்ந்த புளிய மரம் உள்ளது. இந்த மரத்தை வெட்ட தங்கவேல் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயனில்லை. மரத்தை எப்படியாவது அப்புறப்படுத்த நினைத்த, தங்கவேல் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள், 3 பேரை நேற்று வரச்சொல்லியுள்ளார். புளிய மரத்தின் மேல் பகுதியில் மர கிளைகளை வெட்டி தொழிலாளர்கள் அதில் ஆசிட் ஊற்றியதாக கூறப்படுகிறது.இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் என்ன செய்கிறார்கள் என பார்க்க கூட்டமாக சென்றனர். கூட்டமாக பொதுமக்கள் வருவதை பார்த்ததும், 3 தொழிலாளர்களும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து, பழனியப்பன் பிள்ளாநல்லுார் வி.ஏ.ஓ., பெரியசாமியிடம் புகாரளித்தார். அவர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு, சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றார்.