உயர்கல்வியில் சேராத 954 மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி படிக்க வைக்க வேண்டும்
நாமக்கல், 'திருச்செங்கோடு வருவாய் கோட்டத்தில், உயர்கல்வியில் சேராத, 954 மாணவ, மாணவியரை கண்டறிந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி உயர்கல்வி பயில வைக்க வேண்டும்' என, கலெக்டர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.தமிழக திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் பள்ளிக்கல்வி துறை சார்பில், 'நான் முதல்வன்' திட்டத்தில், 'உயர்வுக்குப்படி 2025' என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, நடத்தப்பட்டு வருகிறது. இன்று, திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட பிளஸ் 2 முடித்து, கல்லுாரியில் சேராத மாணவ,-மாணவியர், கல்லுாரியில் சேர்வதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனத்தில் நடக்கிறது.இந்நிலையில், உயர்வுக்குபடி வழிகாட்டுதல் முகாம் தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து, ஆய்வுக் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், உயர்கல்வியில் சேராத, 954 மாணவ, மாணவியரை கண்டறிந்து, அவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, உயர்கல்வியில் சேர்ந்து பயில்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, எலச்சிபாளையம் ஒன்றியம் சக்கராம்பாளையத்தை சேர்ந்த சேகர், அமுதா தம்பதியரின் மகள் சுபிதா, அகரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், ராணி தம்பதியரின் மகள் கோமதி ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று, உயர்கல்வியின் அவசியம், மேலும் உயர்கல்வி பயிலுவதால் வாழ்க்கையில் ஏற்படக் கூடிய முன்னேற்றம், தமிழக அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கினார்.மேலும், 'இன்று திருச்செங்கோட்டில் நடக்கும் கல்லுாரியில் சேர்வதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்று, விருப்பான பாடப்பிரிவில் சேர்ந்து உயர்கல்வி பயில வேண்டும்' என, அறிவுறுத்தினார். முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பரமேஸ்வரன், மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.