வெப்படை ஸ்டாப்பில் நிற்காத பஸ் சிறைபிடிப்பு
பள்ளிப்பாளையம்: சேலத்தில் இருந்து ஈரோட்டிற்கும், ஈரோட்டில் இருந்து சேலத்திற்கும் செல்லும் பெரும்பாலான தனியார் பஸ்கள், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை பஸ் ஸ்டாப்பில் நிற்பதில்லை.பஸ்சில் ஏறி, வெப்படைக்கு டிக்கெட் கேட்டாலும், பஸ் நிற்காது என இறக்கி விடுகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, வெப்படையை சேர்ந்த தம்பதியர், ஈரோட்டில் இருந்து வெப்படைக்கு செல்ல தனியார் பஸ்சில் ஏறியுள்ளனர். ஆனால், பஸ் கண்டக்டர், வெப்படையில் பஸ் நிற்காது எனக்கூறி, தம்பதியை இறக்கிவிட்டுள்ளார்.இதுகுறித்து தம்பதியர், தங்களது உறவினர்களுக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட தனியார் பஸ், வெப்படை பஸ் ஸ்டாப் வந்தபோது, பொது மக்கள் சிறைபிடித்தனர். வெப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பஸ் சென்றது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.