சேலம், கோவை மண்டல சாரணியருக்கான முகாம்
ராசிபுரம் :ராசிபுரம் அடுத்த அணைப்பாளையத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லுாரியில், சேலம், கோவை மண்டல சாரணியர் சிறப்பு முகாம் நடந்தது.கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது: சேலம் மற்றும் கோவை மண்டலத்தை சேர்ந்த கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய, 36 சாரண மாவட்டங்களில் இருந்து, 576 சாரண, சாரணியர்கள், 72 சாரண சாரணிய ஆசிரியர்கள், 36 மாவட்ட பொறுப்பாளர்கள் என மொத்தம், 684 பேர் கலந்து கொண்டுள்ளனர். சாரண இயக்கங்களில் சேரும் போது மாணவ, மாணவியருக்கு பல்வேறு தகவல் கிடைக்கப் பெறுவதோடு, சிறு வயதில் இருந்தே தன்னம்பிக்கையும் வளர்கிறது. மேலும் உங்களின் எதிர்காலமும் பிரகாசமாக அமையும்.இவ்வாறு பேசினார்.முகாமில் அணி வகுப்பு, கிராமிய நடனம், உணவு திருவிழா, கயிற்றுக்கலை, சாகச பயணம், முகாம் கலை என பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில், முதன்மை ஆணையர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் புருசோத்தமன், கோவை மண்டல உதவி ஆணையர் சீனிவாஸ், மகளிர் கல்லுாரி நிறுவன தலைவர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.