வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு
பு.புளியம்பட்டி:புளியம்பட்டியில் நகராட்சி துாய்மை பணியாளர்களை தாக்கியதாக, வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான எம்.ஜி.ஆர்.,வணிக வளாகத்தில் ஆறு கடைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இந்த இடத்தில் புதிதாக வணிக வளாகம் கட்டவுள்ளதால் பழைய கடைகளை இடித்து அகற்ற, நகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பணியில் ஈடுபட்ட தங்களை தகாத வார்த்தையில் பேசி, தாக்கியதாக, நகராட்சி துாய்மை பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து நகராட்சி கமிஷனர் கருணாம்பாள், புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் நான்கு வியாபாரிகள் மீது, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், துாய்மை பணியாளர்களை தகாத வார்த்தையால் பேசி தாக்கியதாக, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.