மின்சாரம் தாக்கி சென்ட்ரிங் தொழிலாளி பலி
ராசிபுரம், ராசிபுரம் அருகே, வீடு கட்டும்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். ராசிபுரம் அடுத்த மாரப்பன் தோட்டம் பகுதியில், கதிரவன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக மின்சார வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அலுவலகத்தின் பின்புறம் வீடு கட்டுமான பணி நடந்து வருகிறது. அத்திப்பழகானுாரை சேர்ந்த சுரேஷ் மகன் சுகன், 22, குமரேசன் மகன் மணிகண்டன், 18, ஆகிய இருவரும் சென்ட்ரிங் வேலை செய்து வந்தனர். சென்ட்ரிங் பணியின் போது, இரும்பு தகடுகளை எடுத்துச்சென்றனர். அப்போது, மேலே சென்ற மின் கம்பி மீது இரும்பு தகடுகள் மோதின. இதில், தகடுகளை துாக்கி சென்ற இருவரும் துாக்கி வீசப்பட்டனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சுகன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ராசிபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.